"ஊழியர்களுக்கு சம்பளம் தர முடியவில்லையே!" : நிரவ் மோடி 'கண்ணீர்' கடிதம்

எனது நிறுவனத்தில் பணி செய்யும் 2,200 ஊழியர்களுக்கு சம்பளம் தர, எனது நிறுவனங்களின் நடப்புக் கணக்கில் உள்ள பணத்தை எடுக்க அனுமதிக்க வேண்டும்.

ஆர்.சந்திரன்

பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு 11,500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள, நிரவ் மோடி, தன்மீதான குற்றச்சாட்டு குறித்து இ மெயில் மூலம் விளக்கம் அளித்துள்ளார். இதில் வங்கியின் நிர்வாகத்தினர், சூழலைச் சரியாக புரிந்து கொள்ளாமல் காட்டிய அவசரத்தால், இப்போது அவரது பெயரில், அவரது நிறுவனங்கள் பெயரில் இருந்த வங்கிக் கணக்குகள், சொத்து என அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது. அதனால், தனது நிறுவனங்களின் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை தனக்கு ஏற்பட்டுள்ளது எனவும் கூறியிருக்கிறார்.

இது மட்டுமின்றி, நிரவ் மோடி தனது இமெயில் கடிதத்தில், “இந்த குற்றச்சாட்டில், தற்போது சொல்லப்படும் வங்கிக் கடன் தொகை மிக அதிகம். எனது நிறுவனங்கள் சார்பிலான கடன்தொகை 5000 கோடி ரூபாயை ஒட்டியே இருக்கும். தற்போது விசாரணையில் முடக்கப்பட்டுள்ள சொத்துகள், வங்கிக் கணக்குகள் போன்றவற்றின் மதிப்பு 5649 கோடி ரூபாய் மதிப்பு கொண்டது என அவர்களே சொல்கிறார்கள். எனவே, அதை வைத்தே எனது கடன்தொகை முழுவதையும் வங்கிக்கு எளிதாகச் செலுத்தியிருக்க முடியும்.

எனது மதிப்பீட்டின்படி, ஒட்டுமொத்தமாக இக்குழுமம் 6500 கோடி ரூபாய் மதிப்பு பெறும். ஆனால், வங்கி தரப்பில் காட்டப்பட்ட அவசரத்தால், இப்போது இதன் வணிக மதிப்பு பெறும் சரிவு கண்டுள்ளது. எல்லாமே வீணாகப் போய்விட்டது. மேலும், தற்போதைய சூழலை வைத்து, என் மீது குற்றம் சாட்டுவதோடு நிற்காமல், தேவையில்லாமல், இந்த விவகாரங்களில் எந்த வகையிலும் தொடர்பில்லாத எனது மனைவி, சகோதரர் போன்றவர்களின் மீது குற்றம் சாட்டப்பட்டு, அவதூறு பரப்பப்பட்டு வருகிறது.

இதுதவிர, எனது உறவினர்கள், தொழில்முறை நண்பர்கள் பலர் வங்கியில் மேற்கொண்ட வணிக நடவடிக்கைகள் தனிப்பட்டவை. அதற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனவே, நான் அதற்கு பொறுப்பல்ல. ஆனால், அவ்விதமாகவும் சில விஷயங்களில் என்னைத் தொடர்புபடுத்தி தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. ஏற்கனவே பிப்ரவரி 13 அன்று வங்கிக்கு எனது கடன்தொகை தொடர்பாக ஒரு கடிதம் எழுதியிருந்தேன். இப்போது மீண்டும் இந்த கடிதத்தை அனுப்புகிறேன். இப்போது எனது கோரிக்கை எல்லாம், எனது நிறுவனத்தில் பணி செய்யும் 2,200 ஊழியர்களுக்கு சம்பளம் தர, எனது நிறுவனங்களின் நடப்புக் கணக்கில் உள்ள பணத்தை எடுக்க அனுமதிக்க வேண்டும் என்பதே” என்றும் நிரவ் மோடி தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

Key words :

×Close
×Close