/indian-express-tamil/media/media_files/2025/09/15/nirmala-sitharaman-ai-regulation-2025-09-15-17-51-46.jpg)
We should keep AI ‘under our reins’ for the common good: Sitharaman
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை பொது நலனுக்காக "நம் கட்டுப்பாட்டில்" வைத்திருக்க வேண்டும், ஏனெனில் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருவதால், அதற்கேற்ப கட்டுப்பாடுகளும் சமமான வேகத்தில் இருக்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்களன்று தெரிவித்தார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் இந்த கருத்து, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இந்தியாவின் தொழில்நுட்ப அணுகுமுறை விதிமுறைகளை விட புதுமைகளை நோக்கியே அதிகம் இருக்கிறது என்று குறிப்பிட்டதற்குப் பிறகு, நிதி ஆயோக் நிகழ்வில் வெளியானது.
அசுரர்களைப் போன்றதா செயற்கை நுண்ணறிவு?
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி இந்தியாவை ஒரு வளர்ந்த பொருளாதார நாடாக்குவது பற்றிய நிதி ஃபிரான்டியர் டெக் ஹப் அறிக்கையை வெளியிடும் நிகழ்ச்சியில் பேசிய நிர்மலா சீதாராமன், "ஒரு நன்மை நம்மிடம் வரும்போது அதன் தாக்கத்தை புரிந்துகொள்ளும் நாடு இந்தியா. ஆனால், ஒரு நன்மை என்பது முற்றிலும் நன்மையாகவும் இருப்பதில்லை. அதற்கு எப்பொழுதும் சில நிபந்தனைகள் இருக்கும். அது தானாகவே நன்மை விளைவிப்பதில்லை. ஆகவே, பொது நலனுக்காக நாம் அதை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.
அசுரர்களுக்குக் கிடைத்த வரங்கள், அவற்றை உருவாக்கியவர்களுக்கே ஆபத்தாக மாறியது. அதேபோல், செயற்கை நுண்ணறிவும் கட்டுப்பாடு இல்லாமல் விடப்பட்டால், மனித குலத்திற்கு ஆபத்தாக மாற வாய்ப்புள்ளது. எனவே, இந்தத் தொழில்நுட்பத்தை நமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்
பல்வேறு அசுரர்கள் எவ்வாறு தங்கள் வாக்குறுதியை மீறினர் என்பது நமக்கு தெரியும். அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வரத்தின் நிபந்தனை, நீங்கள் சில விஷயங்களை செய்யக்கூடாது என்பது. ஆனால், அந்த அசுரன் அந்த 'செய்யக்கூடாத' விஷயங்களை செய்யத் தொடங்கியவுடன், அது கட்டுப்பாட்டை இழக்கிறது.
செயற்கை நுண்ணறிவானது நம்முடைய டிஎன்ஏவில் இருப்பதால், அதை எவ்வாறு நம் கட்டுப்பாட்டில் வைத்திருந்து, பொது நலனுக்காக பயன்படுத்த வேண்டும் என்பதை நாம் அறிவோம் என நினைக்கிறேன்," என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
அதே நிகழ்வில் பேசிய அஸ்வினி வைஷ்ணவ், எங்களின் முழு அணுகுமுறையிலும், தொழில்நுட்பத்தில் எங்களின் சார்பு புதுமைகளை நோக்கியே அதிகம் உள்ளது. கட்டுப்பாடுக்கும், புதுமைகளுக்கும் இடையே ஒரு சமன்பாடு இருந்தால், நாங்கள் புதுமைகளை நோக்கிச் செல்கிறோம்.
இது ஐரோப்பா மற்றும் உலகின் பிற பகுதிகளில் இருந்து மிகவும் வேறுபட்டது. அங்கு கட்டுப்பாடு, சட்டம் இயற்றுதல், ஒழுங்குமுறை அமைப்பை உருவாக்குதல் ஆகியவற்றை நோக்கியே செல்கிறார்கள். தொழில்நுட்பம் புதுமைகளை உருவாக்கும் என்றும், ஒரு சட்டத்தின் மூலம் அதை கட்டாயப்படுத்துவதற்கு பதிலாக, சரியான ஒழுங்குமுறை அமைப்பைப் பெறுவதற்கு நாம் முன்னேறுவோம் என்றும் நாங்கள் நம்புகிறோம்," என்று கூறினார்.
இந்தியா விதிமுறைகளை விட, புதிய கண்டுபிடிப்புகளையே அதிகம் ஊக்குவிப்பதாகத் தெரிவித்தார். ஐரோப்பா போன்ற நாடுகளில், புதிய சட்டங்கள் இயற்றுவதற்கும், விதிமுறைகளை உருவாக்குவதற்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில், தொழில்நுட்பம் தொடர்ந்து முன்னேறும்போது, அதற்கேற்ற சரியான விதிமுறைகள் காலப்போக்கில் தானாகவே உருவாகும் என்று நம்பப்படுகிறது என அவர் கூறினார்.
இந்தியாவின் இலக்கு என்ன?
நிதி ஆயோக் அறிக்கையின்படி, இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப மையம், 2035-க்குள், உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் துறையில் 10 முதல் 15 சதவீதம் வரை பங்களிக்க முடியும் என்று எதிர்பார்க்கிறது. இதற்கு, மக்கள் மற்றும் முக்கியத் துறைகளை, ஏஐ தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு தயார் படுத்த வேண்டும். வங்கி, மருந்துகள் மற்றும் வாகனத் துறை போன்ற முக்கியமான துறைகளில் ஏஐ -ஐ இணைக்க வேண்டும் என்றும், பொறுப்பான பயன்பாட்டிற்காக வலுவான நிர்வாக அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கை பரிந்துரைக்கிறது.
நிதி ஃபிரான்டியர் டெக் ஹப் அறிக்கையின்படி, பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை விரைவாகப் பயன்படுத்துதல் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மூலம், 2035-ஆம் ஆண்டிற்குள் உலகளாவிய செயற்கை நுண்ணறிவு மதிப்பீட்டில் இந்தியா 10-15 சதவீதம் பெற முடியும். இதற்காக, இறையாண்மை கட்டமைப்பை உருவாக்குதல், வேலைகளுக்காக மக்களுக்கு பயிற்சி அளித்தல், வங்கி, மருந்து, வாகனத் துறை போன்ற முக்கிய துறைகளில் செயற்கை நுண்ணறிவை இணைத்தல் மற்றும் பொறுப்பான பயன்பாட்டிற்கான நிர்வாக கட்டமைப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றை அந்த அறிக்கை பரிந்துரைத்தது.
நிகழ்வில் நிர்மலா சீதாராமன் கூறுகையில், "தொழில்நுட்பத்தையே அழித்துவிடும் கட்டுப்பாடுகளை நாங்கள் விரும்பவில்லை. பொறுப்பான பயன்பாட்டிற்காகவே கட்டுப்பாடுகளை நாங்கள் விரும்புகிறோம்... செயற்கை நுண்ணறிவு நிலையானது அல்ல என்பதால், அதை தொடர்ந்து வைத்திருக்க வேண்டும். தரவுத் தொகுப்புகள் குறித்து இப்போது நாம் கேட்டது போல, செயற்கை நுண்ணறிவு வேகமாக முன்னேறி வரும் ஒரு தொழில்நுட்பம்," என்றார்.
"வேலைகளில் மட்டுமல்லாமல், சமூகத்தின் மேம்பாட்டிற்கு அதிகம் பயன்படுத்தப்படாத வழிகளிலும் (செயற்கை நுண்ணறிவு) பயன்படுத்தப்படலாம் என்ற சவாலை நான் காண்கிறேன். எனவே, தொழில்நுட்பம் ஓடும் அதே வேகத்தில் கட்டுப்பாடும் ஓட வேண்டும் என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும். தொழில்நுட்பம் வேகமாக ஓடினால், கட்டுப்பாடும் வேகமாக ஓட வேண்டும். கட்டுப்பாட்டைப் பற்றி நாம் ஏதோ செய்துவிட்டோம், எனவே அது முடிந்துவிட்டது என்று நாம் நினைக்க முடியாது," என்று அவர் மேலும் கூறினார்.
வரும் பிப்ரவரி 2026-ல், இந்தியா, ஏஐ தாக்க மாநாட்டை (AI Impact Summit) நடத்தவுள்ளது. இதற்கு முன்பாகவே, இங்கிலாந்தின் பிளெட்ச்லி பார்க், சியோல் மற்றும் பாரிஸ் ஆகிய இடங்களில் இம்மாநாடுகள் நடைபெற்றுள்ளன. இது போன்ற மாநாடுகள், செயற்கை நுண்ணறிவு குறித்து ஒரு சர்வதேசப் புரிதலை வளர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.