/indian-express-tamil/media/media_files/2025/07/24/nitin-sandesara-2025-07-24-15-46-36.jpg)
குஜராத்தை தளமாகக் கொண்ட ஸ்டெர்லிங் பயோடெக் (Sterling Biotech) நிறுவனத்தின் உரிமையாளர் நிதின் சந்தேசரா, சுமார் ரூ. 5,000 கோடி வங்கி மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இந்த மருந்தியல் நிறுவனம் ரூ. 5,383 கோடி வங்கி கடன்களை திருப்பி செலுத்தாமல் ஏமாற்றியதாகவும், அந்த நிதியை உரிமையாளர்களின் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக மாற்றியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
சந்தேசரா குழுமத்தின் (Sandesara Group) தலைவராக நிதின் சந்தேசரா பொறுப்பு வகித்தார். இந்நிறுவனத்தின் வலைதளத்தில், "சந்தேசரா குழுமம், சுமார் 6.9 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள குழும மதிப்பீட்டை கொண்டுள்ளது. மேலும் 25 ஆண்டுகளுக்கும் மேலான தொழில்துறை அனுபவத்தை கொண்டுள்ளது. மருந்துகள், சுகாதாரம், எண்ணெய் மற்றும் எரிவாயு, பொறியியல், உள்கட்டமைப்பு, கரையோர துளையிடும் கருவிகள், நில அதிர்வு ஆய்வுகள் மற்றும் எண்ணெய் வர்த்தகம் ஆகியவற்றில் எங்களுக்கு வணிக நலன்கள் உள்ளன" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போதுள்ள தகவல்கள் அடிப்படையில், சந்தேசரா குழுமத்தின் ஒரு பகுதியான ஸ்டெர்லிங் பயோடெக், ஆந்திரா வங்கி தலைமையிலான ஒரு கூட்டமைப்பிடமிருந்து ரூ. 5,000 கோடிக்கும் அதிகமான கடன்களை பெற்றுள்ளது. இந்த கடன்கள் பின்னர் செயல்படாத சொத்துகளாக மாறிவிட்டதாக கூறப்படுகிறது.
முதல் தகவல் அறிக்கையின்படி, டிசம்பர் 31, 2016 நிலவரப்படி, இந்த நிறுவனங்களின் மொத்த நிலுவைத் தொகை ரூ. 5,383 கோடி ஆகும். இந்த வழக்கில் டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ககன் தவான் (Gagan Dhawan), ஆந்திரா வங்கியின் முன்னாள் இயக்குநர் அனூப் கார்க் (Anup Garg) மற்றும் ஸ்டெர்லிங் பயோடெக் இயக்குநர் ராஜ்பூஷன் தீட்சித் (Rajbhhushan Dixit) உள்ளிட்ட சிலரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
"பணமோசடிக்கு பயன்படுத்தப்பட்ட வழிமுறைகளில் ஷெல்/பினாமி நிறுவனங்களை உருவாக்குதல், இருப்புநிலை குறிப்புகளை திரிபுபடுத்துதல், வருவாயை உயர்த்துதல், உள் தகவல்களை பயன்படுத்தி பங்குகளை வர்த்தகம் செய்தல் போன்றவை அடங்கும். கடன் நிதியை திசை திருப்பவும், மேலும் வங்கிக் கடன்களை பெற வருவாயை பெருக்குவதற்கும், பினாமி நிறுவனங்களுக்கும், ஸ்டெர்லிங் குழும நிறுவனங்களுக்கும் இடையே போலியான விற்பனை/கொள்முதல் காட்டப்பட்டது" என்று அமலாக்க இயக்குநரகம் முன்னதாக ஒரு அறிக்கையில் தெரிவித்திருந்தது.
ஸ்டெர்லிங் பயோடெக்கின் வலைதளத்தின்படி, "இந்த நிறுவனம் ஆக்டிவ் பார்மசூட்டிகல் இன்கிரெடியன்ட்ஸ் (Active Pharmaceutical Ingredient - API) வணிகத்தில் ஈடுபட்டுள்ளது. ஸ்டெர்லிங் பயோடெக், குஜராத்தின் மசார் (Masar) என்ற இடத்தில் உற்பத்தி வசதியைக் கொண்டுள்ளது. இது உலக சுகாதார அமைப்பின் தரநிலைகளுக்கு இணங்க சி.ஜி.எம்.பி விதிமுறைகளுக்கு உட்பட்டது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், நிதின் சந்தேசரா தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இந்த நிறுவனங்களுக்கு எதிராக சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறையினர் விசாரணையை தொடங்கிய நிலையில், இவரது குடும்பத்தினர் துபாய் வழியாக நைஜீரியாவுக்கு தப்பிச் சென்றனர். இந்தக் குடும்பத்தினர் நைஜீரியா மற்றும் அல்பேனியா ஆகிய இரு நாடுகளின் குடியுரிமைகளை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.