No Fastag fee till the February end : மின்னணு முறையில் கட்டணம் வசூலிப்பதை ஊக்குவிக்கும் வகையில் பிப்ரவரி 15 முதல் பாஸ்ட் டேக் ஸ்டிக்கர்களை இலவசமாக வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை பாஸ்ட் டேக் ஸ்டிக்கர்களுக்கான கட்டணமான ரூபாய் 100’ஐ தள்ளுபடி செய்து இலவசமாக அவற்றை வழங்க உத்தரவிட்டுள்ளது. இந்த இலவச சலுகை 15 நாட்களுக்கு அதாவது பிப்ரவரி 15 முதல் பிப்ரவரி 29 வரை அமலில் இருக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வாகன உரிமையாளர்கள் முறையான வாகன பதிவு ஆவணங்களுடன் அங்கீகரிக்கப்பட்ட பாயிண்ட் ஆப் சேல் (Point of sale) இடங்களுக்கு சென்று பாஸ்ட் டேக் ஸ்டிக்கர்களை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். எனினும் பாஸ்ட் டேக் வெலட்டுக்கான பாதுகாப்பு வைப்பு தொகை மற்றும் குறைந்தபட்ச இருப்பு தொகை ஆகியவை எந்தவித மாற்றமும் இல்லாமல் தொடரும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (National Highways Authority of India) வழங்கும் இந்த இலவச பாஸ்ட் டேக் ஸ்டிக்கர்களை அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள ’இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய’ கட்டண வசூல் மையங்களிலும் (fee plazas), வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் (Regional Transport Offices), பொது சேவை மையங்கள் (Common Service Centres), போக்குவரத்து மையங்கள் (transport hubs) மற்றும் பெட்ரோல் நிலையங்கள் ஆகியவற்றில் பெற்றுக் கொள்ளலாம்.
நெடுஞ்சாலைகளில் மின்னணு முறையில் கட்டணம் வசூல் செய்வதற்காக பாஸ்ட் டேக் முறையை அறிமுகப்படுத்தியப் பிறகு ஒரு நாளைக்கான வசூல் என்பது ரூபாய் 67 கோடியில் இருந்து ரூபாய் 87 கோடியாக அதிகரித்துள்ளது, என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
உங்கள் வாகனங்களின் முகப்பு கண்ணாடிகளில் ஒட்டப்படும் மின்னணு டேக்’களுக்கு தான் பாஸ்ட் டேக் என்று பெயர். உங்களுடைய வாகனம் ஒரு நெடுஞ்சாலை கட்டண வசூல் மையத்தை நெருங்கும் போது அந்த மையத்தில் உள்ள டேக் ரீடர் (Tag reader) எனப்படும் கருவி உங்கள் வாகனத்தில் உள்ள பாஸ்ட் டேக்’ஐ ஸ்கேன் செய்து மின்னணு முறையில் உங்கள் பயணத்துக்கான கட்டணத்தை உங்கள் கணக்கிலிருந்து கழித்துக் கொள்ளும். இந்த வகை பாஸ்ட் டேக் முறையிலான கட்டண வசூல் மையங்களை மத்திய அரசு இந்தியாவில் உள்ள 527 தேசிய நெடுஞ்சாலைகளில் அறிமுகப்படுத்தியது. கடந்த டிசம்பர் 2019 வரை குறைந்தது ஒரு கோடி அளவிலான பாஸ்ட் டேக்’கள் வினியோகிக்கப்பட்டுள்ளன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.