பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB), தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, இனி அனைத்து சேமிப்பு கணக்குகளுக்கும் குறைந்தபட்ச இருப்புத் தொகையைப் பராமரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், அதற்கு விதிக்கப்பட்டு வந்த அபராதம் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
வங்கிகளில் மாதாந்திர குறைந்தபட்ச இருப்புத்தொகை (Minimum Balance) பராமரிக்கப்படாவிட்டால், அபராதம் வசூலிக்கப்படுவது வழக்கம். இந்த குறைந்தபட்ச இருப்புத்தொகை கிராமப்புறங்களில் குறைவாகவும், நகர்ப்புறங்களில் அதிகமாகவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கும். இந்த நடைமுறை ஏழை மற்றும் எளிய மக்களை வெகுவாகப் பாதித்து வந்தது. சில கணக்குகளில், இந்த அபராதத் தொகை வசூலிக்கப்பட்டு, அதில் இருக்கும் பணம் முழுவதும் காலியாகும் நிலையும் உருவாகி வந்தது குறிப்பிடத்தக்கது.
பாரத் ஸ்டேட் வங்கி ஏற்கனவே 2020 ஆம் ஆண்டிலேயே இந்த அபராத கட்டணத்தை ரத்து செய்துவிட்டது. அதைத் தொடர்ந்து, மற்றொரு பெரிய வங்கியான கனரா வங்கி கடந்த ஜூன் மாதம் தனது சேமிப்புக் கணக்குகளுக்கு குறைந்தபட்ச இருப்புத் தொகை பராமரிப்பு தேவையை நீக்கியது. அந்த வரிசையில், தற்போது பஞ்சாப் நேஷனல் வங்கியும் இணைந்துள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
வாடிக்கையாளர்களை அதிகப்படுத்தும் நோக்கத்திலும், அவர்கள் மீதான நிதி அழுத்தத்தை குறைக்கும் வகையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது. இந்த முன்னெடுப்பு, வங்கி சேவைகளை அனைவருக்கும் எளிதாக கிடைக்கச் செய்வதற்கான ஒரு முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது. மேலும் பல வங்கிகளும் இந்த வரிசையில் இணைந்து, வாடிக்கையாளர் நலனை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.