UPI சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுமா என்ற கேள்விக்கு மத்திய நிதி அமைச்சகம் தரப்பில் பதிலளிக்கப்பட்டு உள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் விவாத கட்டுரையில் UPI சேவைகளுக்கு கட்டணம் வசூலிப்பது குறித்த சாத்தியக் கூறுகள் குறித்து பங்குதாரர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன.
இந்த நிலையில் மத்திய நிதி அமைச்சகத்திடம் இருந்து ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 21) அறிக்கை ஒன்று வெளியானது. அந்த அறிக்கையில், “UPI (யுனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸ்- Unified Payment Interface) சேவைகளுக்கு கட்டணம் விதிக்கும் திட்டம் எதுவும் தற்போது இல்லை. சேவை வழங்குநர்கள் வேறு வழியை சிந்திக்க வேண்டும்.
UPI சேவைகள் டிஜிட்டல் பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றுகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆகஸ்ட் 17ஆம் தேதி ரிசர்வ் வங்கியின் விவாத கட்டுரை ஒன்று வெளியானது. அதில், NEFT வங்கி பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்க பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
எனினும் வங்கிகள் இதனை இன்னமும் ஏற்றுக்கொள்ளவில்லை. தற்போதுவரை இந்தப் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. இந்த நிலையில் யூபிஐ சேவைகளுக்கும் கட்டணம் வசூலிக்க பங்குதாரர்களிடம் கேட்டது தெரியவந்துள்ளது.
இதற்கு நிதி அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் சமீபகாலமாக UPI பரிவர்த்தனை வேகம் எடுத்துள்ளது. நடப்பாண்டின் ஜூலை மாதத்தில் 6.28 பில்லியன் (628 கோடி) UPI பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன.
இது மதிப்பு அடிப்படையில் 10.63 டிரில்லியன் ஆகும். மேலும் ஜூலை மாதத்தின் பரிவர்த்தனை மதிப்பு 7.2 சதவீதம் மற்றும் 4.8 சதவீதம் ஆகும். இதற்கிடையில் நிதி அமைச்சகம் ட்விட்டரில் இது தொடர்பான விளக்கத்தில், “கடந்த ஆண்டு UPI டிஜிட்டல் நிதி பரிவர்த்தனைக்கு அரசு நிதி உதவி அளித்தது. அதேபோல் இந்தாண்டும் பயனர்களை ஊக்குவிக்க முடிவு செய்துள்ளது” எனத் தெரிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil