இந்தியாவின் முக்கிய எண்ணெய் நிறுவனங்களால் மானியம் இல்லா எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.37 உயர்த்தப்பட்டுள்ளன. சென்னையில் 14.2 கிலோ எடையுள்ள ஒரு எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.606.50 ஆக உயர்ந்துள்ளது.
எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலை உயர்வு சர்வதேச சந்தையில் அதன் விலை உயர்வே காரணம் என்று நாட்டின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் விலை குறைக்கப்பட்டு வந்த நிலையில், இது எண்ணெய் நிறுவனங்கள் எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலையை உயர்த்த மேற்கொண்ட முதல் நடவடிக்கையாகும்.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம், இணையதளத்தில் வெளியிட்டுள்ள விலையின்படி, டெல்லியில் 14.2 கிலோ கேஸ் சிலிண்டரின் விலை இப்போது ரூ.593 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த மே மாதம் ரூ.581.50 ரூபாயக இருந்த ஒரு சிலிண்டரின் விலை ரூ.11.50 அதிகரித்து ரூ.593க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல, கொல்கத்தாவில் 14.2 கிலோ இண்டேன் சிலிண்டரின் விலை ரூ.31.50 அதிகரித்து ரூ.616 ஆக உயர்ந்துள்ளது. மும்பையில், ஒரு இண்டேன் 14.2 கிலோ எல்பிஜி கேஸ் சிலிண்டரின் விலை ரூ.11.50 அதிகரித்து ரூ.590.50 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் 14.2 கிலோ எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.37 அதிகரித்து ரூ.606.50 ஆக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
மானியம் இல்லா எல்பிஜி சிலிண்டர்களின் விலை தொடர்ச்சியாக 3 முறை விலை குறைக்கப்பட்ட நிலையில், இந்த மாதம் மானியம் இல்லா சிலிண்டரின் விலை முதல் முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. பொதுவாக, எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலை எண்ணெய் நிறுவனங்களால் ஒவ்வொரு மாதமும் மாற்றி அமைத்து நிர்ணயிக்கப்படுகிறது. இதற்கு முன்பு, மே 1-ம் தேதி எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலை மாற்றி அமைக்கப்பட்டது.
இருப்பினும், எல்பிஜி கேஸ் விலை உயர்வு பிரதமரின் உஜ்வாலா திட்டப் பயனாளிகளை பாதிக்காது என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், பிரதமரின் கரிப் கல்யாண் யோஜனா திட்டம் மூலம், ஜூன் 30 வரை இலவச சிலிண்டர் பெறலாம் என்று தெரிவித்துள்ளது.
இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் 14.2 கிலோ எல்பிஜி கேஸ் சிலிண்டரை வீடுகளில் பயன்பாட்டிற்காக விற்பனை செய்கின்றன. அரசு ஒவ்வொரு ஆண்டும் ஒரு வீட்டிற்கு இது போல 12 சிலிண்டர்களுக்கு மானியங்களை அவர்களுடைய வங்கி கணக்குகளுக்கு நேரடியாக பணம் செலுத்தி உதவுகிறது.