/indian-express-tamil/media/media_files/2025/06/11/Y55xU3mmil8Fco0CjaXL.jpg)
மத்திய அரசு ஊழியர்கள் சுமார் 27 லட்சம் பேர் தங்கள் ஓய்வூதிய எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஒரு முக்கிய முடிவை எதிர்கொண்டுள்ளனர். தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) அல்லது புதிதாக அறிவிக்கப்பட்ட ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) ஆகிய இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பது என்பதுதான் தற்போதைய கேள்வியாக இருக்கிறது. இதை தேர்வு செய்வதற்கான கடைசி தேதிஜூன் 30 ஆகும். இது ஒருமுறை மட்டுமே செய்யக்கூடிய மாற்றமாகும். இது குறித்த பல்வேறு தகவல்கள், தீபக் வெல்த் ஃப்ரேம்வொர்க் என்ற யூடியூப் சேனலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த இரண்டு திட்டங்களுக்கும் இடையிலான முக்கிய வேறுபாடுகளைப் புரிந்துகொள்வது, சரியான முடிவை எடுக்க உதவும்.
என்.பி.எஸ் (தேசிய ஓய்வூதியத் திட்டம்)
சந்தை சார்ந்த திட்டம்: என்.பி.எஸ்-ல் ஓய்வூதிய பலன்கள் சந்தை செயல்திறனுடன் இணைக்கப்பட்டுள்ளன. அதாவது, நீங்கள் செலுத்தும் பங்களிப்புகள் நிலையானவை. ஆனால் ஓய்வூதியத் தொகை சந்தையின் ஏற்ற இறக்கத்தைப் பொறுத்து மாறுபடும்.
தகுதி: அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் இருவருக்கும் பொருந்தும். குறைந்தபட்சம் 3 வருட பணி அனுபவம் தேவை.
மொத்தத் தொகை: மொத்தக் கார்பஸில் 60% தொகையை மொத்தமாகப் பெறலாம். இந்தத் தொகைக்கு வரி விலக்கு உண்டு.
ஓய்வூதியம்: ஓய்வூதியம், வருடாந்திர திட்டங்கள் மூலம் பெறப்படுகிறது. பொதுவாக 6-7% வருமானம் கிடைக்கும்.
குடும்ப ஓய்வூதியம்: மனைவிக்கு 100% ஓய்வூதியம் கிடைக்கும் ஆப்ஷன் உள்ளது. இது சட்டப்பூர்வ வாரிசுகளுக்கும் மாற்றப்படலாம்.
வருவாய்: என்.பி.எஸ், சராசரியாக 10-14% வருமானத்தை அளித்துள்ளது.
யு.பி.எஸ் (ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்)
உத்தரவாத ஓய்வூதியம்: ஓய்வுக்குப் பிறகு உத்தரவாதமான ஓய்வூதியத்தை வழங்குகிறது.
தகுதி: மத்திய அரசுப் பணியில் குறைந்தபட்சம் 10 வருட பணி அனுபவம் தேவை.
மொத்தத் தொகை: 25 வருட சேவை உள்ளவர்களுக்கு சுமார் 5 மாத சம்பளத்தை மொத்தமாகப் பெற அனுமதிக்கிறது.
ஓய்வூதியம்: நிலையான ஓய்வூதியத்தை வழங்குகிறது. ஊழியருக்குப் பிறகு அவரது மனைவிக்கு ஓய்வூதியத்தில் 60% கிடைக்கும்.
கணக்கீடு: குறைந்தபட்சம் 25 வருட சேவை உள்ளவர்களுக்கு, கடைசி 12 மாதங்களின் சராசரி சம்பளத்தில் 50% உத்தரவாத ஓய்வூதியமாக வழங்கப்படும்.
வரிச் சலுகைகள்: வரிச் சலுகைகள் குறித்த தெளிவு இன்னும் வழங்கப்படவில்லை.
வருவாய்: என்.பி.எஸ்-ன் வாழ்நாள் உள் வருவாய் விகிதம் (IRR) 9.37% (25 வயதுடையவர்களுக்கு) முதல் 12.02% (45 வயதுடையவர்களுக்கு) வரை இருக்கும்.
இளம் வயதினருக்கு (சுமார் 25 வயதுடையவர்கள்) என்.பி.எஸ் ஒரு சிறந்த தேர்வாக இருக்கலாம். ஏனெனில், அதிக நிதி செயல்திறனுக்கான வாய்ப்பு உள்ளது. மாறாக, ஓய்வுபெறும் வயதை நெருங்குபவர்கள் (35 மற்றும் 45 வயதுடையவர்கள்) அல்லது சந்தை அபாயம் இல்லாமல் உத்தரவாதமான ஓய்வூதியம் மற்றும் குடும்பப் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பவர்களுக்கு யு.பி.எஸ் பரிந்துரைக்கப்படுகிறது.
எனவே, உங்களுடைய நிதி தேவைகளை உணர்ந்து சரியான முடிவை எடுக்க வேண்டும் என்று வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.