நகர்ப்புறங்களில் பெரும்பாலான மக்களின் அத்தியாவசிய தேவையாக மாறியுள்ள ஓலா, ஊபர் போன்ற வாகன ஒருங்கிணைப்பு சேவைகளுக்கான கட்டண முறையில் மத்திய அரசு புதிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதன்படி, பீக் ஹவர்ஸில் பயணிகளிடம் அடிப்படை கட்டணத்தை விட இருமடங்கு வரை அதிகமாக வசூலிக்க இந்த நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும்
இதுவரை, வாகன ஒருங்கிணைப்பாளர்கள் பீக் ஹவர்ஸில் அடிப்படை கட்டணத்தில் இருந்து அதிகபட்சமாக 1.5 மடங்கு மட்டுமே வசூலிக்க முடிந்தது. இந்த வரம்பு தற்போது இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (MoRTH) இன்று (ஜூலை 2) வெளியிட்ட திருத்தப்பட்ட மோட்டார் வாகன ஒருங்கிணைப்பாளர் வழிகாட்டுதல்கள், 2025-ல் இந்த மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில், பீக் ஹவர்ஸில் வாகன ஒருங்கிணைப்பாளர்கள் அடிப்படைக் கட்டணத்தில் இருந்து இரண்டு மடங்கு வரை கட்டணம் வசூலிக்கலாம். பீக் ஹவர்ஸ் அல்லாத சாதாரண நேரங்களில், அடிப்படைக் கட்டணத்தில் குறைந்தபட்சம் 50 சதவீதம் கட்டணமாக வசூலிக்கப்பட வேண்டும்.
மாநில அரசுகள் அந்தந்த வாகன வகைகளுக்கு அறிவித்துள்ள கட்டணமே அடிப்படைக் கட்டணமாகக் கருதப்படும். இந்த திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை மூன்று மாதங்களுக்குள் ஏற்றுக்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதிய வழிகாட்டுதல்களின்படி, ஒரு பயணிக்கான அடிப்படைக் கட்டணம் குறைந்தபட்சம் 3 கிலோமீட்டர்களுக்கு வசூலிக்கப்படும். இது பயணியின்றி பயணித்த தூரம் (dead mileage), பயணியை அழைத்துச் செல்ல பயணித்த தூரம் மற்றும் எரிபொருள் செலவு ஆகியவற்றை ஈடுசெய்வதற்காகும்.
3 கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்திற்கான பயணங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது. பயணம் தொடங்கிய இடத்திலிருந்து பயணி இறக்கிவிடப்படும் இடம் வரை மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும்.
ஒருங்கிணைப்பு நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட ஓட்டுநர் தனது சொந்த வாகனத்தைப் பயன்படுத்தினால், மொத்தக் கட்டணத்தில் குறைந்தபட்சம் 80 சதவீதம் ஓட்டுநருக்குச் சென்றடையும். மீதமுள்ள கட்டணம் ஒருங்கிணைப்பு நிறுவனத்தால் தக்கவைக்கப்படும். ஒருங்கிணைப்பு நிறுவனத்திற்குச் சொந்தமான வாகனங்களை இயக்கும் ஓட்டுநருக்கு, மொத்தக் கட்டணத்தில் குறைந்தபட்சம் 60 சதவீதம் வழங்கப்படும். ஓட்டுநர்களுக்கான கட்டணப் பட்டுவாடா தினசரி, வாராந்திர அல்லது இரு வாரங்களுக்கு ஒருமுறை ஒப்பந்தத்தின்படி செய்யப்படும்.
பயணத்தை ஏற்றுக்கொண்ட பிறகு, ஓட்டுநர் சரியான காரணம் இல்லாமல் ரத்து செய்தால், கட்டணத்தில் 10 சதவீதம் அபராதமாக விதிக்கப்படும். இந்த அபராதம் ரூ. 100-ஐ தாண்டக்கூடாது. இதேபோல், ஒரு பயணி சரியான காரணம் இல்லாமல் பயணத்தை ரத்து செய்தால், கட்டணத்தில் 10 சதவீதம் அபராதமாக விதிக்கப்படும். இந்த அபராதமும் ரூ. 100-ஐ தாண்டக்கூடாது.
இந்த புதிய வழிகாட்டுதல்கள், பயனர்களின் பாதுகாப்பு மற்றும் ஓட்டுநர்களின் நலன் ஆகியவற்றை உறுதி செய்யும் அதே வேளையில், எளிதான ஒழுங்குமுறை அமைப்பை வழங்குவதற்கான ஒரு முயற்சியாக அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளன.