ஆர்.சந்திரன்
டாடா குழுமத்தில் கடந்த ஆண்டுக்கு முன், ரத்தன் டாட்டாவுக்கும், அப்போது அதன் தலைவராக இருந்த சைரஸ் மிஸ்த்ரிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை அடுத்து, தமிழரான சந்திரசேகரன் டாடா குழுமத் தலைவராக பொறுப்பு ஏற்றார். இன்றுடன் டாடா குழுமத் தலைவராக ஓராண்டை நிறைவு செய்யும் சந்திர சேகரன், இந்த ஓராண்டு காலத்தில் சிறப்பாக செயல்பட்டிருப்பதாக பரவலான பாராட்டைப் பெற்றுள்ளார். தனிப்பட்ட நபர்களின் பாராட்டு ஒருபுறம் என்றால், அவர் பொறுப்பு ஏற்ற பிறகு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளின் எதிரொலியாக டாடா குழும நிறுவனங்களின் பங்குவிலைகள் பலவும் சந்தையில் நல்ல முன்னேற்றம் கண்டிருப்பது கவனிக்கத்தக்கது.
டாடா குழுமத் தலைவராகத் தேர்வாகும் முன் அக்குழுமத்தின் ஒரு நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி சர்வீஸஸ் எனும் ஐடி துறை நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்தார் சந்திரசேகர். கடந்த ஓராண்டில் ஜப்பானிய பங்குதாரர் டொகோமோவுடன் பேசி, டாடா டொகோமோவை பார்தி ஏர்டெல் வசம் ஒப்படைத்து தொலைத் தொடர்புத்துறையில் இருந்து வெளியேறியது. டாடா ஸ்டீல் நிறுவனத்தின் வெளிநாட்டு சொத்துகளை ஜெர்மனி பங்குதாரருக்கு கைமாற்றி புதிய பாதை அமைத்தது. தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வந்த டாடா மோட்டார்ஸை லாபப் பாதைக்குத் திருப்பியது என பல முக்கிய முடிவுகளை எடுத்திருக்கிறார். சுமார் 100 நிறுவனங்கள் கொண்ட குழுமமாக உள்ளதை முடிந்த வரையில் குறைத்து, பெயருக்காக செயல்பட்டு, நஷ்டம் தரும் நிறுவனங்களை மூடும் இவரது நடவடிக்கையால் டாடா குழுமத்திற்கு கடந்த ஓராண்டில் நல்ல பெயர் கிடைத்துள்ளது.
டாடா குழும நிறுவனங்களில் டாடா ஸ்டீல் பங்குவிலை கடந்த ஓராண்டில் 53 சதவீத வளர்ச்சியும், டைட்டன் 76 சதவீத வளர்ச்சியும், டாடா குளோபல் பிவரேஜஸ் 89 சதவீத வளர்ச்சியும், இந்தியன் ஹோட்டல்ஸ் 33 சதவீதமும், வோல்டாஸ் 59 சதவீதமும், டிரண்ட் 28 சதவீதமும், டாடா எல்க்ஸி 32 சதவீதமும் வளர்ச்சியும் கண்டுள்ளன.
எதிர்காலத்திட்டங்கள் எனும்போது, ஏற்கனவே விமானப் போக்குவரத்தில் இரண்டு நிறுவனங்களில் பங்குவகித்து வரும் டாடா குழுமம், இந்தியன் ஏர்லைன்ஸ் பங்கு விற்பனை நடந்தால், அதிலும் கணிசமான அளவு பங்குகளை பெற ஆர்வம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தத்தில், ஏற்கனவே இந்திரா நூயி பெப்சி தலைவராகச் செயல்பட்டு, பன்னாட்டு அளவில் தமிழர்களின் திறமைக்கு சான்றாக உள்ள நிலையில், இப்போது சந்திரா என அன்புடன் குறிப்பிடப்படும் சந்திரசேகரன் டாடா குழுமத் தலைவராக வெற்றிக் கொடி கட்டினால், அது தமிழர்களின் நிர்வாகத்திறனுக்கு இன்னொரு எடுத்துக்காட்டாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.