pan card online apply : குடும்ப அட்டை (ரேஷன் கார்டு), வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றின் வரிசையில் பான் அட்டையும் (PAN CARD) இன்று நம் அன்றாட வாழ்வில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
நிரந்தர கணக்கு எண் அட்டை என்பதன் சுருக்கமான பான் அட்டை, 10 எண்கள் மற்றும் எழுத்துகளைக் கொண்ட தனித்துவமான அட்டையாக வருமான வரித் துறையால் வழங்கப்படுகிறது.
ஒருவரின் சிறந்த அடையாள சான்றாக அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள பான் கார்டு, வருமான வரிக் கணக்கு தாக்கல் மற்றும் வரி செலுத்துதல், சில வர்த்தகரீதியான ஒப்பந்தங்களை மேற்கொள்ளுதல் போன்றவற்றின்போது அவசியமான தேவையாக உள்ளது.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பான் கார்டு வேறு எங்கெல்லாம், எப்போதெல்லாம் தேவைப்படுகிறது என்பதை நாம் அறிந்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
இனியாவது கவனமாய் இருங்கள்!.. இந்த இடங்களுக்கு மறக்காமல் பான் கார்டு கொண்டு செல்லுங்கள்!
வங்கிகளில் நிரந்தர வைப்பு நிதிக்கான கணக்கில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் டெபாசிட் செய்வதாக இருந்தால், அப்போது அதற்கான படிவத்தில் பான் எண்ணை குறிப்பிட வேண்டியது கட்டாயமாகும்.
இதேபோன்று, வங்கியிலோ அல்லது அஞ்சலக சேமிப்பு கணக்கிலோ ஒருவர், 50ஆயிரம் ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்தாலும், அப்போதும் அவர் தனது பான் எண்ணை அளிக்க வேண்டியது அவசியம்.
முக்கியமாக ஒரு நபர் ரூ. 5 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புடைய அசையா சொத்துக்களை விற்கும்போதோ, வாங்குபோதோ, அதற்கான ஆவணங்களுடன் பான் எண் குறித்த விவரங்களையும் அவசியம் தர வேண்டும்.
ஹோட்டல்கள் மற்றும் உணவு விடுதிகளில், ஒரே சமயத்தில் ரூ.25 ஆயிரத்துக்கு மேல் பில் தொகையை செலுத்தும்போது, அத்தொகையுடன் பான் கார்டு தகவல்களும் அளிக்கப்பட வேண்டும்.
இதேபோன்று, ஒரே நாளில் ரூ.50 ஆயிரம் அல்லது அதற்கு மேற்கொண்ட மதிப்புடைய வங்கி காசோலைகள், வரைவோலைகளை டெபாசிட் செய்யும்போது, அவற்றுடன் பான் விவரங்கள் தரப்பட வேண்டியது அவசியம்.
அத்துடன் கிரெடிட், டெபிட் கார்டுகளுக்கு ஒருவர் விண்ணப்பிக்கும்போதும், அந்த விண்ணப்பதுடன் பான் கார்டு நகலையும் கட்டாயம் இணைத்து கொடுக்க வேண்டும்.
ஆயுள் காப்பீட்டுத் தொகை செலுத்தும்போது: நிறுவனங்களின் பங்குகள் மற்றும் பத்திரங்களை வாங்கும்போது, ஒருவர் தனது பான் விவரங்களை அவசியம் அளிக்க வேண்டும்.
ஆயுள் காப்பீட்டுக்கான பிரீமியத் தொகையாக, ஒருவர் ஓராண்டில் ரூ. 50 ஆயிரம் அல்லது அதற்கு மேல் செலுத்தும்போது, அவர் தமது பான் விவரங்களை சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்திடம் கட்டாயம் கொடுக்க வேண்டும்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, வருமான வரிக் கணக்குத் தாக்கலை முறைப்படுத்தும் நோக்கில், பான் கார்டு விவரங்களை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டியது உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.