2007-ம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான 'கற்றது தமிழ்' திரைப்படத்தில் அவரது சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்து ஸ்ரீ ராம் திரையுலகில் அறிமுகமானார். 2009-ம் ஆண்டு பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான 'பசங்க' படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அப்படத்தில் ஜீவா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததற்காக, சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதைப் பெற்று, பட்டிதொட்டி எங்கும் அறியப்பட்டார். அன்றிலிருந்து ரசிகர்கள் அவரை 'பசங்க ஜீவா' என்றே அழைத்து வருகின்றனர். இந்தத் திரைப்படம் வெளியாகி 16 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரங்கள் அனைவரும் இளைஞர்களாக வளர்ந்துவிட்டனர்.
'பசங்க' திரைப்படத்திற்குப் பிறகு, 'தீராத விளையாட்டுப் பிள்ளை' (2010), 'வேங்கை' (2011), 'ஜில்லா' (2014) போன்ற படங்களில் நடித்தாலும், 'கோலி சோடா' (2014) திரைப்படம் ஸ்ரீ ராமுக்கு மீண்டும் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது. அதன் பின்னர், 'பாபநாசம்' (2015), 'அடுத்த சாட்டை' (2019), 'ஸ்ட்ரீட் லைட்ஸ்' (2018) போன்ற பல படங்களில் நடித்தார். திரைப்படங்கள் மட்டுமின்றி, 'நவரசா', 'ஃபைவ், சிக்ஸ், செவன், எய்ட்' போன்ற வலைத் தொடர்களிலும் நடித்திருந்தார்.
'பசங்க' படத்தில் ஜீவா கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நடிகர் ஸ்ரீராம், சுற்றுச்சூழல் பாதுகாப்பை நோக்கமாக கொண்டு, கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கும் உயிரித் தொழில்நுட்ப நிறுவனத்தை (Biotechnology Company) வெற்றிகரமாக நடத்தி வருகிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா?
'Aatrel' என்ற பெயரில் அவர் நடத்திவரும் உயிரித் தொழில்நுட்ப நிறுவனம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் இயங்குகிறது. 2050-ஆம் ஆண்டுக்குள் உலக அளவில் கார்பன் வெளியேற்றத்தை பூஜ்யமாக்க வேண்டும் என்ற இலக்குடன் செயல்படும் இந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக (CEO) ஸ்ரீராம் உள்ளார்.
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்நிறுவனம், பாசிகளை அடிப்படையாகக் கொண்டு மின்சாரம் தயாரிப்பது, பல்வேறு தொழில்நுட்பங்கள் தொடர்பான பயிற்சி மற்றும் ஆலோசனைகளை வழங்குவது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது. இது மட்டுமின்றி, கழிவு நீர் மேலாண்மை சம்பந்தப்பட்ட திட்டங்களிலும் இந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. சினிமாவில் சாதித்த ஸ்ரீராம், தற்போது சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் ஒரு தொழிலதிபராகவும் வலம் வருவது பலருக்கும் உத்வேகமளிக்கும் விஷயம்.