Personal finance news: ஒரு முதலீடு செய்யணுமா உடனே கூகுள் போவோம், சர்ச் பண்ணுவோம், டெர்ம்ஸ் அண்ட் கண்டிசன்ஸ் எதுவும் தெரியாம போய் குழப்பத்துல சிக்கிக்குவோம். கொஞ்சம் பணத்தை போட்டு ஏமாந்தா பரவால ரொக்க ரொக்கமா கொண்டு போய் கொட்டிட்டு கண்ணீர் வடிச்சா ஆறுதலே சொல்ல முடியாது. “முதலீடுகள் சந்தை அபாயத்திற்கு உட்பட்டது”ன்னு வெளம்பரம் முடியும் போது சத்தமா (வேகமா) சொன்னாரே உங்க காதுல விழலையா அப்டினு கைய விரிச்சுட்டா என்ன பண்றது? அதுக்கு தான் ஒரு முதலீடுன்னு வரும் போது சம்பாதிச்ச காச மொத்தமாவோ கொஞ்சமாவோ முதலீடு செஞ்சாலும் முறையான ஆலோசனைகளை பெறுவது மிகவும் அவசியமானது.
நிதி மேலாண்மை என்பது என்னவோ ராக்கெட் சயின்ஸ் இல்லை தான். ஆனாலும் நீங்கள் எங்கே முதலீடு செய்வது, எப்படி முதலீடு செய்வது என்ற குழப்பதோடு இருந்தால், நீண்ட நாட்களாக இது குறித்து யோசித்தும் எந்தவிதமான முடிவையும் எட்ட முடியவில்லை என்றால் , சந்தைகள் குறித்தும் முதலீடு திட்டங்கள் குறித்தும் தெரிந்து கொள்ள போதுமான நேரம் கிடைக்கவில்லை என்றாலும் நீங்கள் தாரளமாக நிதி ஆலோசகரின் உதவியை நாடலாம்.
நீண்ட நாட்களாக சம்பாதிக்கின்றீர்கள், நன்றாகவும் சம்பாதிக்கின்றீர்கள், ஆனால் உங்களிடம் சொத்து என்று ஏதும் இல்லையா? சேமிப்பு செய்யும் பழக்கம் குறித்து ஒரு போதும் நீங்கள் யோசனை செய்ததில்லை என்றாலும் நீங்கள் நிதி ஆலோசகரை நாடுவது உங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் நல்லது.
வரி சலுகைகளை பெற நீங்கள் முயன்று பல்வேறு திட்டங்களில் கால் பதிக்க, உங்களுக்கு பெரிய அளவில் ரிட்டர்ன்ஸ் ஏதும் கிடைக்கவில்லை என்றால் உங்கள் திட்டங்கள் ஏதும் முதலீட்டு திட்டங்கள் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். நல்ல ரிட்டர்ன்ஸை வழங்கும் அதே நேரத்தில் வரிச்சலுகைகளையும் பெற்றுத் தரும் திட்டம் என்ன என்பதை ஆய்வு செய்ய நிதி ஆலோசகர் உதவி உங்களுக்கு நிச்சயமாக தேவை.
சந்தைகளில் முதலீடு செய்யும் போது லாபம், நஷ்டம் என்பது சாதாரண விசயம்தான். ஆனால் நீங்கள் ஒவ்வொரு முறையும் முதலீடு செய்து முதலீட்டை இழக்கின்றீர்கள் எனில் தவறு சந்தை மீது இல்லை. உங்கள் மீது தான். இது போன்று மேற்கொண்டு பணத்தை இழக்காமல் இருக்கவும் நீங்கள் நிதி ஆலோசகருக்கு உடனே போனைப் போடுங்கள்.
ஓய்வு பெறுவது : ஒரு சவாலான காரியம் தான். ஓய்வு பெற்ற பிறகு நம்முடைய தேவைகளை எல்லாம் பூர்த்தி செய்ய போதுமான பணம் கையிருப்பு இருக்கிறதா, போதுமான பணம் என்றால் அதில் பணவீக்கம் எல்லாம் சேர்த்தால் எவ்வளவு தேவை என்பது போன்ற குழப்பங்களை நிவர்த்தி செய்யவும் துறைசார் வல்லுநர்களால் மட்டுமே உதவி முடியும் தவிர கூகுள் முடிவுகள் அல்ல.
ஏன் கூகுளை நம்பக் கூடாது?
ஏன் கூகுளை நம்பக் கூடாது என்று கூறிவிடுவோம். நிறைய நல்ல தகவல்களை கூகுள் நமக்கு வழங்கினாலும் கூட சரிநிகராக “பெய்ட் ப்ரோமோஷன்ஸ், பெய்ட் இன்ஃப்ளூயென்சர்கள் என்று அவர்களின் கருத்துகளும், கட்டுரைகளும் கூட இணையத்தில் உலா வந்து கொண்டு தான் இருக்கின்றன. ஏற்கனவே நமக்கு சந்தைப் பற்றி ஒன்றும் தெரியாத போது, உண்மை எது, பொய் எது என்பதை கணிக்க முடியாமல் போய்விடும்.
தவறான வழிநடத்தல்கள் சிக்கலை தரும் என்றால் என்ன செய்ய முடியும் அதனால் எப்போதும் துறைசார் வல்லுநர்களின் உதவிகளை பெறுவது நல்லது. ஏன் என்றால் சந்தைகள் அபாயங்களுக்கு உட்பட்டது.
அதே போன்று எந்த நிதி ஆலோசகரையும் நீங்கள் இலவசமாக அணுகிவிட இயலாது. நீங்கள் ஒரு வேலையை இலவசமாக யாருக்கேனும் செய்து தருவீர்களா? இல்லை தானே…. அதே போன்று தவறான ஒன்றில் முதலீடு செய்து இழக்கும் பணத்தைக் காட்டிலும் நிதி ஆலோசகருக்கு நீங்கள் வழங்கும் கட்டணம் குறைவு தான்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.