தனிநபர் கடன் பெறும்போது, பலரும் முதலில் கவனிப்பது வங்கிகள் விதிக்கும் வட்டி விகிதத்தை தான். வட்டி விகிதம் ஒரு முக்கியமான காரணியாக இருந்தாலும், அதையும் தாண்டி கடன் பெறுபவர்கள் கருத்தில் கொள்ள வேண்டிய வேறு சில முக்கிய அம்சங்களும் உள்ளன. இவை உங்கள் கடன் அனுபவத்தையும், ஒட்டுமொத்த செலவையும் கணிசமாக பாதிக்கலாம்.
கவனிக்க வேண்டிய மற்ற காரணிகள்:
1. செயலாக்க கட்டணங்கள் (Processing Charges): நீங்கள் தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது, கடன் தொகையின் ஒரு பகுதியை செயலாக்க கட்டணமாக கடன் வழங்குபவர் வசூலிப்பார். சில சமயங்களில், இந்த செயலாக்க கட்டணங்கள் 5 சதவீதம் வரை அதிகமாக இருக்கலாம். எனவே, ஒரு வங்கி குறைந்த வட்டியை வசூலித்து, அதிக செயலாக்க கட்டணங்களை விதித்தால், அது உங்களுக்கு அதிக செலவாகலாம்.
2. கடன் வழங்குபவரின் நற்பெயர் (Lender’s Reputation): கடன் வழங்குபவரின் நற்பெயர் ஒரு முக்கியமான காரணியாகும். பொதுவாக, நன்கு அறியப்பட்ட வங்கிகளை முதலில் அணுகுவது நல்லது. அவை சரியான விதிமுறைகளில் கடன் வழங்கக்கூடும்.
3. மறைமுக கட்டணங்கள் (Hidden Charges): சில கடன் வழங்குபவர்கள் மறைமுக கட்டணங்களையும் விதிக்கிறார்கள். ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு முன், அச்சிடப்பட்ட சிறு விவரங்களை கவனமாக படிப்பது அவசியம். மேலும், உங்கள் தனிநபர் கடனுக்கான இ.எம்.ஐ மற்றும் கால அளவை சரியாக கணக்கிட வேண்டும்.
4. ஒட்டுமொத்த அனுபவம் (Overall Experience): இறுதியாக, வாடிக்கையாளர் சேவை என்பது ஒரு கடன் வழங்குபவரை தேர்ந்தெடுக்கும் போது உங்கள் முடிவை பாதிக்கக் கூடிய மற்றொரு முக்கிய காரணியாகும். உங்கள் நண்பர்களிடம் விசாரிப்பது, பிற சமூக ஊடக தளங்களில் உள்ள மதிப்புரைகளை சரிபார்ப்பது மூலம் கடன் வழங்குபவரின் வாடிக்கையாளர் சேவை மற்றும் ஒட்டுமொத்த அனுபவம் பற்றி நீங்கள் அறியலாம்.