சமீப காலமாக ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகள் அதிகளவில் நடைபெற்று கொண்டிருக்கின்றன. இதற்கு காரணம், ஆன்லைனில் நுகர்வோருக்குப் பணப்பரிவர்த்தனைகள் செய்கையில், கேஷ்பேக் போன்ற பல்வேறு சலுகைகள் கிடைப்பது தான்.
இந்நிலையில், ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளில் முக்கிய செயலியான போன்பே, 50 ரூபாய்க்கு மேல் மொபைல் ரீசார்ஜ் செய்பவர்களிடம் இனி பிராசஸிக் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
யுபிஐ அடிப்படையிலான பரிவர்த்தனைகள் இலவசமாக பல செயலிகளில் நடைபெறும் சூழ்நிலையில், கட்டணம் வசூலிக்கத் தொடங்கிய முதல் டிஜிட்டல் செயலி போன்பே ஆகும். போட்டி நிறுவனங்களைப் போலவே, போன்பேயும் கிரெடிட் கார்டுகள் மூலம் செலுத்தப்படும் கட்டணங்களுக்கு பிராசஸிங் கட்டணத்தை வசூலிக்கிறது.
இதுகுறித்து போன்பே நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் பேசுகையில், " ரூ.50க்கு குறைவான மொபைல் ரீசார்ஜ்களுக்கு கட்டணம் கிடையாது. ரூ.50 முதல் ரூ.100 வரையிலான மொபைல் ரீசார்ஜ்களுக்கு 1 ரூபாயும், ரூ.100க்கு மேல் 2 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. ஆன்லைன் தளங்களில் கட்டணம் வசூலிக்கும் முதல் நிறுவனம் நாங்கள் கிடையாது. பல நிறுவனங்கள் ஏற்கனவே ட்ஜிட்டல் தளத்தில் சிறிய அளவிலான தொகையை பிராசஸிங் கட்டணமாக வசூலித்துவருகிறது. நாங்கள் கிரெடி கார்ட் மூலம் நடைபெறும் மொபைல் ரீசார்ஜ்களுக்கு மட்டும் தான் கட்டணம் வசூலிக்கிறோம்" என தெரிவித்தார்.
ஜூலை மாதம் வெளியான பெர்ன்ஸ்டீன்
அறிக்கையின்படி, வாடிக்கையாளர்களுக்குத் தள்ளுபடி வழங்குவதில் போன்பே மற்றும் குகூள் ப்ளே கவனம் செலுத்திவருகிறது. குறிப்பாக, சந்தையில் 2.5 முதல் 3 சதவிகிதம் வரை செலவழித்துள்ளது. அதேசமயம், சந்தையில் செலவிடுவதை பேடிஎம் குறைத்துவருகிறது. 2017ஆம் நிதியாண்டை காட்டிலும் 1.2 சதவிகிதம் குறைவாக தான் பேடிஎம் செலவழித்துள்ளது. அந்த தொகை 2020இல் 0.4 சதவிகிதமாகவும், 2021இல் 0.2 சதவிகிதமாகவும் செலவழிக்கும் தொகை குறைந்துள்ளது. அதற்கு நேர் மாறாக, யுபிஐ, பிஓஎஸ், இணை பரிவர்த்தனை தொடர் வளர்ச்சி கண்டுள்ளது
இதன் காரணமாக, வரும் காலத்தில் அனைத்து விதமான ஆன்லைன் பணப்பரிவர்த்தனைக்கும் கட்டணம் வசூலிக்கப்படுமோ என்ற அச்சம் நுகர்வோரிடம் ஏற்பட்டுள்ளது.
ஆன்லைன் பணப்பரிவர்த்தனை பிரிவில் மிகப்பெரிய நிறுவனமாக திகழும் போன்பே, செப்டம்பர் மாதத்தில் மட்டுமே 165 கோடிக்கும் அதிகமான UPI பரிவர்த்தனைகளைப் பதிவு செய்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.