நாட்டின் 74வது சுதந்திர தினம் இன்னும் சில தினங்களில் கொண்டாடப்பட உள்ள நிலையில், நேர்மையாக வரி செலுத்துபவர்களை கவுரவிக்கும் விதத்திலும், வெளிப்படையான வரிவிதிப்பு கொள்கையை அமல்படுத்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த புதிய திட்டத்திற்காக, பிரதமர் மோடி நாளை (ஆகஸ்ட் 13ம் தேதி) நிதித்துறை முதன்மை தலைமை ஆணையர்கள் மற்றும் தலைமை ஆணையர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த புதிய திட்ட அறிமுகம் குறித்த தகவலை, மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் பி சி மோடி உள்ளிட்ட மூத்த அதிகாரிகள், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளனர்.
புதிய மற்றும் வெளிப்படையான வரி விதிப்பு முறைகள் குறித்து 13ம் தேதி முற்பகல் 11 மணிக்கு வெப்கேஸ்ட் மூலம் அதிகாரிகள் இடையே, பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதி, இந்த புதிய திட்டம் நாட்டு மக்களுக்காக அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
வருமான வரி தாக்கல் நிகழ்வில் மக்களுக்கு ஏற்படும் இடர்பாடுகளை களையும் பொருட்டு, பிரதமர் அலுவலகம், கடந்த 3 முதல் 4 வாரங்களாக தொடர்ந்து அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. வருமானவரி தாக்கல் எப்போதும் முகமற்ற மதிப்பீடு முறையிலேயே நடத்தப்பட்டு வருவதால் இதில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதிலும், வரி செலுத்துபவர்களுக்கு ஏற்படும் இடர்பாடுகளை களையும் விதத்திலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே, இந்த ஆலோசனையின் முக்கிய சாராம்சமாக இருந்து வந்துள்ளதாக வருமானவரித்துறை உயரதிகாரி தெரிவித்துள்ளார்.
வரி செலுத்துபவர்ளுக்கு வரிவிதிப்பு முறையை எளிமைப்படுத்தும் வகையிலான நடைமுறைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவுறுத்தியுள்ளார்.
வருமான வரி விதிப்பு முறையில் முகமற்ற மதிப்பீடு முறை இன்னும் முழுவதுமாக அமல்படுத்தப்படவில்லை. 2019ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அமல்படுத்திய முதல் நிலையில், 58 ஆயிரம் பதிவுகளில் 14 சதவீதம் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை அமல்படுத்தப்பட்ட ஆண்டில் அதாவது 2017-18ம் நிதியாண்டில் வருமானவரி தாக்கல் விகிதம் 0.55 சதவீதம் அதிகரித்திருந்த நிலையில், 2018-19ம் நிதியாண்டில் இது 0.25 சதவீத அளவிற்கு சரிவடைந்திருந்தது.
இந்தியாவில் பொருளாதார சுணக்கநிலை ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது கொரோனா தொற்று பரவலும் ஏற்பட்டுள்ளதால், தொழில்கள் முடங்கியுள்ளன, பல்வேறு நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்துள்ளதோடு மட்டுமல்லாது, சம்பளக்குறைப்பையும் அமல்படுத்தியுள்ளன. இதன்காரணமாக, வரி வசூல் நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மத்திய அரசு, வருவாயை பெருக்கும் நோக்கத்தில் மாற்று வழிகளை கையாள துவங்கியுள்ளது.
மத்திய நிதியமைச்சர் இந்தாண்டின் துவக்கத்தில் Vivad se Vishwas என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி அதன்மூலம் பொதுமன்னிப்பு வழங்கும் முறையை அமல்படுத்தினார். இதற்கு நல்ல பலன் கிடைத்தது. இந்த திட்டத்தின் மூலம், ரூ.2 லட்சம் கோடிகள் அளவிற்கு வரி வசூல் ஆகியிருந்தது.
Vivad se Vishwas திட்டத்தின் நோக்கம் யாதெனில், நேரடி வரி விதிப்பு வழக்குகள் தொடர்பாக உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தின் மேல்முறையீடுகள் ஆணையரின் பிரிவில் தேங்கியிருக்கும் 4,83,000 வழக்குகளை முடித்து அதன்மூலம் வரி வசூலிப்பதே ஆகும்.
2020-21ம் நிதியாண்டில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில், நேரடி வரி வசூல் ரூ.13.19 லட்சம் கோடிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் ரூ 6.38 லட்சம் கோடி வசூலிக்கப்பட்டதில், கார்பரேட் வரியாக ரூ 6.81 லட்சம் கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டின் முதல் 3 மாதங்களில், வருமானவரித்துறை ரூ.1.16 கோடி வருமான வரி மற்றும் கார்பரேட் வரியாக வசூலித்துள்ளது. இது கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 30 சதவீதம் குறைவு என Controller General of Accounts வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil