சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார அமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. இதில், ‘பிரிந்து உள்ள உலகில், எல்லோரும் பகிர்ந்துகொள்ளும் எதிர்காலத்தை உருவாக்குதல்’ என்ற தலைப்பில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அதுவும் ஹிந்தியில்.
மோடி தனது உரையில், "1997-ல் பாரத பிரதமராக இருந்த தேவ கவுடா இந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசி இருக்கிறார். அவருக்கு பின்னர் இப்போது நான்தான் இதில் பங்கேற்று இருக்கிறேன். இந்த இடைப்பட்ட காலத்தில் இந்திய பொருளாதாரம் குறிப்பிடத்தக்க அளவுக்கு மாற்றத்தை சந்தித்து உள்ளது. அப்போது இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தி 400 பில்லியன் டாலராக (சுமார் ரூ.26 லட்சம் கோடி) இருந்தது. இப்போது 6 மடங்குக்கும் மேல் அதிகரித்து உள்ளது" என்றார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, இந்தியாவில் உள்ள வளமான வர்த்தக வாய்ப்புகளையும், சுலபமாக தொழில் துவங்குவதற்கான சூழலையும் எடுத்துக் கூறி, தாராளமாக முதலீடு செய்ய வருமாறு, பன்னாட்டு தொழில் அதிபர்களை கேட்டுக் கொண்டார்.
https://www.youtube.com/embed/sgrw7WDbFj8
மத்திய அரசு, பல்வேறு துறைகளில் மேற்கொண்டு வரும் சீர்திருத்தங்களையும் பட்டியலிட்டார். பன்னாட்டு நிறுவனங்களை ஈர்க்கும் நோக்கில், அன்னிய நேரடி முதலீட்டு விதிமுறைகள் மேலும் தளர்த்தப்பட்டு உள்ளதையும், அவர் சுட்டிக்காட்டினார். இந்தியா என்றாலே, அங்குள்ள எண்ணற்ற வர்த்தக வாய்ப்புகள் தான், உலகினரின் கவனத்திற்கு வரும். இந்தியாவையும், வர்த்தகத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது என்றும், அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
மேலும், "பயங்கரவாதம், பருவநிலை மாற்றம், தன்நல மைய அணுகுமுறை ஆகியவை உலகுக்கு சவால்களாக அமைந்து உள்ளன. பயங்கரவாதம் ஒட்டுமொத்த மனித சமூகத்துக்கே அச்சுறுத்தலாக அமைந்து இருக்கிறது. மற்றொரு மிக முக்கிய விஷயம், நன்றாக படித்த இளைஞர்களை பயங்கரவாதத்தை நோக்கி செல்வதற்கு மூளைச்சலவை செய்யப்படுகிறது. எனவே உலகத்தின் முன் பயங்கரவாதமும், பருவநிலை மாற்றமும் மிகப்பெரிய கவலை அளிக்கும் அம்சங்களாக உள்ளன.
பயங்கரவாதம் என்பது மிகவும் ஆபத்தானது. நல்ல பயங்கரவாதிக்கும், மோசமான பயங்கரவாதிக்கும் இடையேயான செயற்கையான வேறுபாடும், பயங்கரவாதத்தைப் போன்றே ஆபத்தானது" என்று பேசினார்.
இதையடுத்து, மாநாட்டை முடித்துக்கொண்டு, பிரதமர் மோடி இன்று அதிகாலை தலைநகர் டெல்லி வந்தடைந்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.