2023-24-ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆண்டு வருமான வரி உச்ச வரம்பு அதிகரிப்பு, வேளாண் துறைக்கு நிதி ஒதுக்கீடு எனப் பல துறைகளுக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய பட்ஜெட்டை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். காணொலி வாயிலாக பேசிய மோடி, "அம்ரித் காலின் (Amrit Kaal) முதல் பட்ஜெட், வளர்ந்த இந்தியாவாக கட்டமைக்க வலுவான அடித்தளத்தை உருவாக்கும். இந்த பட்ஜெட் ஏழைகள், நடுத்தர மக்கள், விவசாயிகள் உள்ளிட்ட லட்சிய சமுதாயத்தின் கனவுகளை நிறைவேற்றும்.
வளமான மற்றும் வளர்ந்த இந்தியா என்ற கனவுகளை நனவாக்க நடுத்தர வர்க்கத்தினர் பெரும் சக்தியாக உள்ளனர். அதை மேம்படுத்த அரசாங்கம் பல முடிவுகளை எடுத்துள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.
பட்ஜெட்டின் பல்வேறு அம்சங்கள் குறித்து பேசிய மோடி, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையின் வெற்றி விவசாயத் துறையிலும் பிரதிபலிக்க வேண்டும் என்று அதற்கான டிஜிட்டல் உள்கட்டமைப்பை அமைப்பதற்கான திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது கிராமப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு கூட்டுறவு நிறுவனங்களை மையமாக மாற்றும்.
உள்கட்டமைப்பில் ரூ. 10 லட்சம் கோடி முதலீடு வளர்ச்சிக்கு வேகத்தையும் புதிய ஆற்றலையும் தரும்" என்று அவர் கூறினார்.
2023-24 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் மாதச் சம்பளம் பெறும் வகுப்பினருக்கான வருமான வரிச் சலுகை, அரசாங்கத்தின் மூலதனச் செலவின உந்துதல் உள்ளிட்ட பல அறிவிப்புகள் குறித்து நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
புதிய வரி விதிப்பின் கீழ் ஆண்டு வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் அவர் கூறுகையில், புதிய வரி விதிப்பு இனி இயல்புநிலை வரி விதிப்பாக இருக்கும். மற்றொரு முக்கிய அம்சம் என்னவென்றால், மூலதன முதலீட்டுச் செலவு 33 சதவீதம் அதிகரித்து ரூ.10 லட்சம் கோடியாக உள்ளது, இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.3 சதவீதமாக இருக்கும் என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/