ஆர். சந்திரன்
பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிரவ் மோடிக்கு சொந்தமான நிறுவனம் ஃபயர் ஸ்டார் இன்டர்நேஷனல். இந்நிறுவனத்தின் நிதித்துறை தலைவர் விபுல் அம்பானி. அவர் நிரவ் மோடி சார்பில் மும்பையில் இருந்த வங்கிக் கிளையில் மட்டுமின்றி, அதன் பிராந்திய அலுவலகம் மற்றும் தலைமை அலுவலகத்திலும் கூட பல அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்திருக்கிறார். இது சிபிஐ விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேற்கண்ட விவரங்களை சிபிஐ வழக்கறிஞர் கூறியதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
அதில் மேலும், "விபுல் அம்பானி தற்போது சிபிஐ வசம் விசாரணைக் கைதியாக உள்ளார். வரும் மார்ச் 5ம் தேதி வரை அந்த விசாரணை நடக்க உள்ளது.
தற்போது நடந்துள்ள 11,400 கோடி ரூபாய் ஊழலில் சதி திட்டம் தீட்டியவர்களில் விபுல் அம்பானியும் ஒருவர் என சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை கருதுகிறது. சோதனை மற்றும் விசாரணையில் கிடைத்த ஆவணங்கள் மற்றும் தகவல்கள் அடிப்படையில் விசாரணை அமைப்புகள் இவ்வாறு கருதுகின்றன. அதோடு, விபுல் அம்பானியும் வருவாய்க்கு கூடுதலாக சொத்து சேர்த்திருப்பது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் சொத்துகள் மூலம் தெரிய வருகிறது அவ்விதமான சொத்துகள் இருப்பது உறுதி செய்யப்பட்டு, நிருபிக்கப்படும் நிலையில் அவை அனைத்தும் பறிமுதல் செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது.