பெண் குழந்தைகளுக்கான எதிர்காலத்திற்கு போஸ்ட் ஆஃபிஸின் சிறந்த சேமிப்புத் திட்டம்!

SSY savings scheme: சுகன்யா சமிர்தி யோஜனா திட்டத்தின் வட்டி விகிதம் 7.6 சதவீதம் ஆகும்.

Sukanya Samriddhi Yojana 2019

பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக சேமிக்க நினைப்பவர்களுக்கு தபால் நிலையத்தின் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் சிறந்த தேர்வாகும். நம் முதலீடும் பாதுகாப்பாக இருக்கும். பெண் குழந்தையின் கல்வி மற்றும் திருமண செலவுகளை இது பூர்த்தி செய்யும். இதன் மூலம் 10 வயதிற்குள் உள்ள பெண் குழந்தைகளுக்கு, பெற்றோர் அல்லது காப்பாளரின் உதவியுடன் இந்த கணக்கினை தொடங்க முடியும். இந்திய தபால் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி, ஒரு பெற்றோர் அதிகபட்சமாக இரு பெண் குழந்தைகளின் பெயரில் இந்த திட்டத்தைத் தொடங்கலாம்.

தகுதி என்ன?

இந்த சேமிப்பு திட்டமானது குழந்தை பிறந்த உடனே கூட ஆரம்பித்துக் கொள்ளலாம்.பெண் குழந்தைகள் மட்டுமே சுகன்யா சமிர்தி கணக்கு வைத்திருக்க தகுதியுடையவர்கள்.கணக்கு திறக்கும் போது, பெண் குழந்தைக்கு 10 வயதுக்கு குறைவாக இருக்க வேண்டும். SSY கணக்கைத் திறக்கும்போது, பெண் குழந்தையின் வயது ஆதாரம் கட்டாயமாகும். ஓராண்டில் குறைந்தபட்சம் ரூ.250 முதலீடு செய்யலாம். அதிகபட்சமாக ரூ.1,50,000 வரை முதலீடு செய்யலாம்.

சுகன்யா சமிர்தி திட்டத்தின் வட்டி விகிதம்

இதற்கான வட்டி விகிதம் ஏப்ரல் – ஜூன் 2020 நிலவரப்படி 7.6% ஆகும். இந்த திட்டத்திற்கான வட்டி விகிதம் காலண்டுக்கு ஒரு முறை அரசால் மாற்றம் செய்யப்படும். இது முதலீட்டுக்கு பங்கமில்லாமல், கணிசமான லாபத்தினை கொடுப்பதால், பெண் குழந்தைகளின் வருங்காலத்திற்கு உதவியாக இருக்கும். இந்த சேமிப்புத் திட்டத்தை 14 ஆண்டுகள் வரை மட்டுமே தொடர முடியும். எனவே ஓராண்டிற்கு ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், 14 ஆண்டுகள் முடிவில் ரூ.14 லட்சம் ஆகிறது. 21 ஆண்டுகளுக்குப் பின், வட்டி சேர்க்கப்பட்டு ரூ.46 லட்சமாக திரும்பக் கிடைக்கிறது. இதேபோல் ஆண்டிற்கு ரூ.50,000 என 14 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், இறுதியாக ரூ.23 லட்சமாக திரும்பக் கிடைக்கிறது.

தேவையான ஆவணங்கள்

செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில் பெண் குழந்தைகளைச் சேர்க்க அவர்களின் பிறப்புச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும். பிறப்புச் சான்றிதழ் இல்லாத நிலையில், ஆதார் கார்டு, பான் கார்டு மற்றும் பாஸ்போர்ட் போன்றவற்றை வயதுச் சான்று ஆவணமாக வழங்கலாம். இந்தத் திட்டத்தை தொடங்க அருகிலுள்ள தபால் நிலையத்தை அணுகலாம். பெற்றோரின் ஆதார் அட்டை மற்றும் குழந்தையின் ஆதார் அட்டை அல்லது பிறப்புச் சான்றிதழ் நகலைக் காண்பித்து கணக்கை எளிதாகத் தொடங்க முடியும். செல்வ மகள் திட்டத்தின் படிவத்தை நிரப்பி தேவையான ஆவணங்களுடன் புகைப்படத்தை சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும்

சுகன்யா சமிர்தி திட்டத்தில் வரி சலுகைகள்

இந்த திட்டக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் எந்தவொரு தொகையும் 80 சி பிரிவின் கீழ் அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு அளிக்கப்படும். இந்தத் திட்டத்தின் முதிர்வு மற்றும் வட்டித் தொகைக்கும் விலக்கு அளிக்கப்படுகிறது.பெண் குழந்தையானது 18 வயதை அடைந்த பிறகே திரும்ப பெற முடியும். ஆனால் அதுவும் நிலுவையில் 50% தொகையினை குழந்தையின் கல்விச் செலவினங்களுக்காக பெற்றுக் கொள்ள முடியும். இதற்கு 18 வயது நிரம்பியதற்கான சான்று அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ் அளிக்க வேண்டும்.ஒரு வேளை உங்களது சுகன்யா சம்ரிதி கணக்கினை இடையில் தொடராவிட்டால், 15 வருடங்கள் கழித்து வட்டியுடன் திரும்ப பெற முடியும்.

எப்படி விண்ணப்பிப்பது?

இந்தியாவில் உள்ள அஞ்சலகங்களில் நீங்கள் இந்த கணக்கினை தொடங்க முடியும். பொதுத்துறை அல்லது தனியார் துறை வங்கிகள் மூலம் தொடங்கி கொள்ளலாம். இல்லையெனில் ஆர்பிஐயின் இணையதளத்தில் https://rbidocs.rbi.org.in/rdocs/content/pdfs/494SSAC110315_A3.pdf இந்த படிவத்தினை டவுன்லோடு செய்து கொள்ளலாம். இது தவிர பொதுத்துறை வங்கிகளான எஸ்பிஐ, பிஎன்பி, பிஓபி வங்கிகளின் இணையத்திலும் டவுன் லோடு செய்து கொள்ளலாம். இது தவிர தனியார் வங்கிகளான ஐசிஐசிஐ வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, ஹெச் டிஎஃப்சி வங்கி உள்ளிட்டவற்றின் இணையத்தளத்தில் இருந்தும் பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தில் கையொப்பமிட்டு, அதனை சம்பந்தபட்ட அஞ்சல் அலுவலகத்திலோ அல்லது வங்கிகளிலோ கொடுத்து, அதனுடன் சரியான ஆவணங்களையும் இணைத்து இந்த கணக்கினை தொடங்கிக் கொள்ளலாம்.

சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தின் முதிர்வு

21 ஆண்டுகள் நிறைவடையும் போது SSY திட்டம் முதிர்ச்சியடைகிறது. முதிர்ச்சியடைந்ததும், நிலுவைத் தொகை, கணக்கில் நிலுவையில் உள்ள வட்டியுடன், கணக்கு வைத்திருப்பவருக்கு செலுத்தப்படும். முதிர்ச்சியடைந்த பின்னர் SSY கணக்கு மூடப்படாவிட்டால், மீதமுள்ள தொகை தொடர்ந்து வட்டி சம்பாதிக்கும். கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், 21 வயது காலம் முடிவதற்குள் பெண் குழந்தை திருமணமானால் கணக்கு தானாகவே மூடப்படும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Post office best savings scheme sukanya samriddhi yojana interest rate

Next Story
மூத்த குடிமக்களுக்கான முத்தான மூன்று முதலீட்டு திட்டங்கள்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X