Post office savings gives upto Rs.35 lakh return: மாதந்தோறும் ரூபாய் 1,500 டெபாசிட் செய்து, 35 லட்சம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கும் அஞ்சல் அலுவலகத்தின் கிராம் சுரக்ஷா திட்டத்தின் விவரங்களை இப்போது பார்ப்போம்.
இந்தியா தபால் துறை வழங்கும் பல சேமிப்புத் திட்டங்கள் நாட்டில் மிகவும் பிரபலமான ஆபத்து இல்லாத சேமிப்புத் திட்டங்களாகும். தபால் அலுவலகத் திட்டங்கள் பெரும்பாலும் கிராமப்புற மக்களை இலக்காகக் கொண்டது. இந்தியாவில் உள்ள சராசரி நடுத்தரக் குடிமகனுக்கு, நிலையான மற்றும் நல்ல வட்டி விகிதங்களைக் கொண்ட நல்ல திட்டங்களில் முதலீடு செய்வது முதன்மையான முன்னுரிமைகளில் ஒன்றாக உள்ளது. அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் தபால் அலுவலகம், மக்களின் அந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்காக, இந்திய அஞ்சல் துறை தனது கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களின் கீழ் கிராம சுரக்ஷா திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
இந்தியாவின் கிராமப்புற மக்களுக்காக கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீட்டுக் கொள்கை 1995 இல் தொடங்கப்பட்டது. கிராமப்புற மக்களுக்கு பொதுவாக காப்பீடு வழங்குவதும், குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள நலிந்த பிரிவினர் மற்றும் பெண் தொழிலாளர்கள் பயன்பெறுவதும், கிராமப்புற மக்களிடையே காப்பீட்டு விழிப்புணர்வை பரப்புவதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும், என்று இந்தியா போஸ்ட் தனது இணையதள பக்கத்தில் தெரிவித்துள்ளது.
அஞ்சல் அலுவலகத்தின் கிராம் சுரக்ஷா யோஜனா அல்லது கிராம் சுரக்ஷா திட்டத்தின் கீழ், ஒரு முதலீட்டாளர் இந்த பாலிசியில் மாதந்தோறும் ரூபாய் 1,500 டெபாசிட் செய்தால், 35 லட்சம் ரூபாய் வரை திரும்பப் பெறலாம். இந்தத் திட்டம் வயது வந்தோருக்கு லாபகரமான முதலீட்டு விருப்பமாகச் செயல்படும். கிராம சுரக்ஷா திட்டத்திற்கான வயதுத் தகுதி 19 வயது முதல் 55 வயதிற்குள் இருக்க வேண்டும் என்று தபால் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த வயதிற்கு இடைப்பட்ட எந்த இந்திய குடிமகனும் இந்த திட்டத்தில் பதிவு செய்யலாம்.
இந்தத் திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை ரூ. 10,000 ஆகும், முதலீடு செய்ய விரும்புபவர்கள் கிராம் சுரக்ஷா திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் வரையிலான எந்தத் தொகையையும் தேர்வு செய்யலாம். போனஸுடன் உறுதிசெய்யப்பட்ட தொகையானது 80 வயதை எட்டும்போது வழங்கப்படும் அல்லது மரணம் ஏற்பட்டால் அவர்களின் சட்டப்பூர்வ வாரிசு அல்லது நாமினிக்கு வழங்கப்படும்.
கிராம் சுரக்ஷா திட்டத்திற்கான பிரீமியத்தை செலுத்துவதற்கான நெகிழ்வுத்தன்மையை முதலீட்டாளர் பெறுகிறார். ஒருவர் மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டுதோறும் என்ற அடிப்படையில் பிரீமியம் செலுத்தலாம். பிரீமியத்தை செலுத்த வாடிக்கையாளர்களுக்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கப்படுகிறது. பாலிசி காலத்தின் போது காலாவதியானால், பாலிசியை மீண்டும் தொடங்க வாடிக்கையாளர் நிலுவையில் உள்ள பிரீமியங்களைச் செலுத்தலாம்.
ஒரு முதலீட்டாளர் 19 வயதில் 10 லட்சம் கிராம் சுரக்ஷா பாலிசியில் முதலீடு செய்தால், 55 ஆண்டுகளுக்கு மாத பிரீமியம் ரூ.1,515 ஆகவும், 58 ஆண்டுகளுக்கு ரூ.1,463 ஆகவும், 60 ஆண்டுகளுக்கு ரூ.1,411 ஆகவும் இருக்கும். பாலிசி வாங்குபவர் 55 ஆண்டுகளுக்கு ரூ. 31.60 லட்சமும், 58 ஆண்டுகளுக்கு 33.40 லட்சமும் முதிர்வுப் பலனைப் பெறுவார். 60 ஆண்டுகளுக்கு முதிர்வுப் பலன் ரூ.34.60 லட்சமாக இருக்கும்.
வாடிக்கையாளர் 3 ஆண்டுகளுக்குப் பிறகு பாலிசியை ஒப்படைப்பதைத் தேர்வுசெய்யலாம், ஆனால், கிராம் சுரக்ஷா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் எந்தப் பலன்களையும் நீங்கள் பெறமாட்டீர்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil