/indian-express-tamil/media/media_files/2025/05/06/XEf28uMqvztqB24d0C7q.jpg)
நாம் அனைவரும் கடினமாக உழைத்து ஈட்டிய பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்ய வேண்டுமென்றால் அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டங்கள் தான் பலரது விருப்ப தேர்வாக இருக்கும். அந்த வகையில் நம்முடைய முதலீட்டிற்கு நல்ல வட்டி வழங்கும் சேமிப்பு திட்டங்கள் குறித்து இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.
ஓய்வுபெற்ற பின்னர் தங்கள் வாழ்நாளை நிதி பாதுகாப்புடன் செலவிட நினைக்கும் ஒவ்வொருவருக்குமான வகையில் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் செயல்பட்டு வருகிறது. இதில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் முதலீடு செய்யலாம். எனினும், 55 வயது பூர்த்தியான அரசு ஊழியர்களும் இதில் முதலீடு செய்ய முடியும். இந்த திட்டத்தில் 8.2 சதவீதம் வட்டியாக வழங்கப்படுகிறது. இதன் மொத்த முதிர்வு காலம் 5 ஆண்டுகள். ஆனால், மூன்று ஆண்டுகள் வரை இதனை நீட்டித்துக் கொள்ள முடியும். இதில் குறைந்தபட்சம் ரூ. 1000-ல் இருந்து அதிகபட்சமாக ரூ. 30 லட்சம் வரை முதலீடு செய்து கொள்ளலாம். இதன்கீழ், ரூ. 1.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு கிடைக்கிறது. அதனடிப்படையில், மூத்த குடிமக்கள் இந்த திட்டத்தை பரிசீலனை செய்யலாம்.
இது தவிர எல்லோருக்குமான திட்டமாக பொது வருங்கால வைப்பு நிதி என்று சொல்லக் கூடிய பி.பி.எஃப் திட்டம் இருக்கிறது. இந்த திட்டத்தில் முதலீடு செய்வதற்கு வயது வரம்பு கிடையாது. இதன் வட்டி விகிதம் 7.1 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இந்த வட்டி விகிதம் வழங்கப்படும். ரூ. 1.5 லட்சம் வரை இதற்கு வருமான வரி விலக்கு இருக்கிறது. இந்த திட்டத்தை பயன்படுத்தி வங்கியில் கடன் பெற்றுக் கொள்ளலாம். இந்த கடனுக்கு 8.1 சதவீத வட்டி வசூலிக்கப்படும். இந்தக் கடனை 36 மாதங்களுக்குள் திருப்பி செலுத்த வேண்டும். மேலும், இந்த திட்டம் தொடங்கி 4 ஆண்டுகள் நிறைவு பெற்றால் அதில் இருந்து 50 சதவீத பணத்தை அவசர தேவைகளுக்காக பெற்றுக் கொள்ள முடியும். இந்த திட்டத்தின் மொத்த முதிர்வு காலம் 15 ஆண்டுகள் ஆகும். அதிகபட்சமாக ரூ. 1.5 லட்சம் வரை இதில் முதலீடு செய்ய முடியும். இப்படி செய்தால் 15 ஆண்டுகளுக்கு பின்னர் நமக்கு சுமார் ரூ. 40 லட்சத்திற்கும் அதிகமாக கிடைக்கும்.
மேலும், தேசிய சேமிப்பு பத்திரமும் அஞ்சல் அலுவலகங்களில் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் கணக்கு தொடங்க 18 வயது பூர்த்தி அடைந்த நபராக இருத்தல் அவசியம். இதன் மொத்த முதிர்வு காலம். 5 ஆண்டுகள். இதில் ரூ. 1000-ல் இருந்து முதலீடு செய்ய முடியும். குறிப்பாக, உச்சபட்ச முதலீடு வரம்பு கிடையாது. இதற்கும், ரூ. 1.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு கிடைக்கிறது. மேலும், இந்த திட்டத்தில் 7.7 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்தப் பத்திரத்தை வங்கியில் சமர்ப்பித்து கடன் பெற்றுக் கொள்ள முடியும். உதாரணமாக இந்த திட்டத்தில் ரூ. 5 லட்சம் முதலீடு செய்தால், 5 ஆண்டுகளுக்கு பிறகு நமக்கு ரூ. 7 லட்சத்து 24 ஆயிரத்து 517 மொத்தமாக கிடைக்கும்.
அதன்படி, இந்த திட்டங்களில் நமது பொருளாதார தேவைக்கு ஏற்றது என்னவென்று ஆராய்ந்து முதலீடு செய்வது சரியான பலன் அளிக்கும்.
நன்றி - Boss Wallah (Tamil) Youtube Channel
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.