இன்றைய காலகட்டத்தில் சேமிப்பு மிக அவசியமான ஒன்றாக உள்ளது. தபால் அலுவலக சேமிப்பு திட்டங்களால் உங்களுக்கு உத்தரவாதமான வருமானத்தை வழங்க முடியும். மேலும் இந்த திட்டங்களால் நீங்கள் கடினமாக சம்பாதித்த பணத்தை இரட்டிப்பாக்க முடியும். அதிக வட்டி விகிதத்துடன் சிறந்த வருமானத்தை உறுதி செய்கிறது. இந்த காலாண்டில் சிறு சேமிப்பு வட்டி விகிதத்தில் அரசு எந்த மாற்றத்தையும் செய்யவில்லை என்றாலும் முதலீட்டுக்கு பங்கம் இல்லாத திட்டம் இது.
போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட்
ஒரு ஆண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கான சேமிப்பு திட்டமாகும். இதில் நீங்கள் உங்கள் பணத்தை சேமிக்க துவங்கினால் 5.5% வரை வட்டி பெற முடியும். இந்த திட்டத்தில் நீங்கள் 13 ஆண்டுகள் முதலீடு செய்தால் உங்களின் முதலீடு இரட்டிப்பாக மாறிவிடும் என்பதற்கு தபால் நிலையங்கள் கேரண்டி அளிக்கின்றன. அதே போன்று 5 ஆண்டு திட்டங்களை தேர்வு செய்தால் உங்களுக்கு 6.7% வரை வட்டி கிடைக்கும். இதன் மூலம் நீங்கள் 10.75 ஆண்டுகளிலேயே முதலீட்டை இரண்டு மடங்காக திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.
தபால் அலுவலக வங்கி சேமிப்பு கணக்கு
தபால் அலுவலக சேமிப்புக் கணக்கு உங்கள் முதலீட்டில் 4.0 சதவீத வட்டியை மட்டுமே வழங்குகிறது. மேலும் உங்கள் பணம் 18 ஆண்டுகளில் இரட்டிப்பாகும்.
தபால் அலுவலக தொடர்ச்சியான வைப்பு கணக்கு (ஆர்.டி)
தபால் அலுவலக தொடர்ச்சியான வைப்புத்தொகை கணக்கிற்கு (ஆர்.டி) 5.8 சதவீத வட்டி வழங்கப்படுகிறது, பணம் முதலீடு செய்யப்பட்டால் அது சுமார் 12 ஆண்டுகளில் இரட்டிப்பாகும்.
தபால் அலுவலக மாத வருமான திட்டம்
அஞ்சல் அலுவலக மாத வருமான திட்டத்தில் (எம்ஐஎஸ்) 6.6 சதவீத வட்டி வழங்கப்படுகிறது, பணம் முதலீடு செய்யப்பட்டால் அது சுமார் 10 ஆண்டுகளில் இரட்டிப்பாகும்.
மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம்
இந்தியா போஸ்ட் செயல்படுத்தும் ஒன்பது சேமிப்புத் திட்டங்களில் மிக முக்கியமான ஒன்று முதியோர் சேமிப்புத் திட்டமாகும். திட்டத்துக்கான வட்டி விகிதம் 7.4 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உங்கள் முதலீட்டு தொகை இரட்டிப்பாக 9 ஆண்டுகள் ஆகும்.
பிபிஎஃப்
தபால் நிலையத்தின் 15 ஆண்டு பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்) தற்போது 7.1 சதவீத வட்டியை அளிக்கிறது, இது இந்த விகிதத்தில் உங்கள் பணத்தை இரட்டிப்பாக்க 10 ஆண்டுகள் வரை ஆகும்.
தபால் அலுவலகம் சுகன்யா சமிர்தி கணக்கு
தபால் நிலையத்தின் சுகன்யா சமிர்தி கணக்குத் திட்டம் 7.6% வரையான அதிக வட்டியை வழங்குகிறது. மேலும் இந்த திட்டம் பணத்தை இரட்டிப்பாக்க 9 ஆண்டுகள் ஆகும்.
தபால் அலுவலகம் தேசிய சேமிப்பு சான்றிதழ்
தபால் அலுவலகத்தின் தேசிய சேமிப்பு சான்றிதழில் (என்.எஸ்.சி) 6.8% வட்டி வழங்கப்படுகிறது. இது 5 ஆண்டு சேமிப்பு திட்டமாகும். மேலும் இந்த வட்டி விகிதத்துடன் பணம் முதலீடு செய்யப்பட்டால், அது சுமார் 10 ஆண்டுகளில் இரட்டிப்பாகும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil