பாதுகாப்பான மற்றும் நல்ல வட்டி விகிதங்களை வழங்கும் நீண்ட கால முதலீட்டு விருப்பங்களை தேடுகிறீர்கள் என்றால் தபால் அலுவலகத் திட்டங்கள் உங்களுக்கு சிறந்தவையாக இருக்கும். பணத்தை பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்ய விரும்பும் போது இது ஒரு சிறந்த வழி. தொற்றுநோய் காலத்தில் செப்டம்பர் காலாண்டிற்கான சிறு சேமிப்பு திட்டத்தின் வட்டி விகிதங்களில் மத்திய அரசு எந்த மாற்றமும் செய்யவில்லை.
அஞ்சலகத்தின் அனைத்து சேமிப்புத் திட்டங்களையும் பார்க்கலாம், அதில் நீங்கள் பணத்தை முதலீடு செய்தால், விரைவில் தொகை இரட்டிப்பாகும்.
தபால் அலுவலக சேமிப்பு கணக்கு
இந்த திட்டத்தில் உங்களுக்கு 4 சதவீத வட்டி லாபம் கிடைக்கிறது. இதில் கணக்கு தொடங்க குறைந்தபட்ச தொகை ரூ.500. தனிநபராகவோ அல்லது இருவர் கூட்டாகவோ கணக்கு தொடங்கலாம். இத்திட்டத்தில் செக் புக், ஏடிஎம் கார்டு, நெட் பேங்கிங் மொபைல் பேங்கிங் போன்ற அம்சங்களும் உள்ளன. முதலீட்டு தொகை 18 ஆண்டுகளில் இரட்டிப்பாகும்.
போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட்
டைம் டெபாசிட் திட்டத்தில் நீங்கள் ஒரு ஆண்டு, இரண்டு ஆண்டுகள், மூன்று ஆண்டுகள் மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கு முதலீடு செய்யலாம். ஒன்று முதல் மூன்று ஆண்டுகள் முதலீடு செய்தால் 5.5 சதவீத வட்டி கிடைக்கும். 13ஆண்டுகளில் உங்கள் பணம் இரட்டிப்பாகும். நீங்கள் ஐந்து ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், 6.7 சதவீதத்தில் வட்டியைப் பெறலாம். 10.75 வருடங்களில் உங்கள் பணம் இரட்டிப்பாகும்.
போஸ்ட் ஆபிஸ் ரெக்கரிங் டெபாசிட்
தபால் நிலையத்தில் நீங்கள் தொடங்கும் ரெக்கரிங் டெபாசிட் கணக்குக்கான கால வரம்பு 5 ஆண்டுகள் ஆகும். இந்த திட்டத்தில் 5.8 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. 12.41 வருடங்களில் உங்கள் பணம் இரட்டிப்பாகும்.
மாதாந்திர வருமான திட்டம்
மாதா மாதம் வருமானம் தரும் இந்த தபால் அலுவலக சேமிப்புத் திட்டத்தில் நீங்கள் குறைந்தபட்சம் ரூ.1,500 மற்றும் அதிகபட்சம் ரூ.4.5 லட்சம் வரையில் முதலீடு செய்யலாம். இணைப்புக் கணக்கில் ரூ.9 லட்சம் வரையில் சேமிக்கலாம். இத்திட்டத்துக்கான வட்டி 6.6 சதவீதம். இத்திட்டம் 5 ஆண்டு முதிர்வு காலம் கொண்டது. 10.91 வருடங்களில் உங்கள் பணம் இரட்டிப்பாகும்.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்
இத்திட்டத்தில் 60 வயது நிரம்பிய மூத்த குடிமக்கள் தங்களது வாழ்நாள் வரையில் ரூ.15 லட்சம் வரையில் டெபாசிட் செய்யலாம். இத்திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் வரையில் முதலீடு செய்ய முடியும். இத்திட்டத்துக்கான வட்டி 7.4 சதவீதம். உங்கள் பணம் 9.3 வருடங்களில் இரட்டிப்பாகும்.
பொது வருங்கால வைப்பு நிதி
நடப்பு காலாண்டில் பிபிஎஃப் 7.1 சதவீத வட்டியை வழங்குகிறது. இந்தக் கணக்கு 15 ஆண்டுகளில் முதிர்ச்சியடைகிறது. ஆனால் 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவர் பல வருடங்களுக்கு ஐந்து வருடங்கள் மூலம் கணக்கை நீட்டிக்க முடியும். உங்கள் பணம் 10.14 வருடங்களில் இரட்டிப்பாகும்.
சுகன்யா சம்ரிதி யோஜனா
இந்த திட்டம் பெண் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக இந்திய அஞ்சல் துறையால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில் ஆண்டுக்கு 7.6 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. உங்களது பெண் குழந்தைக்கு கணக்கு தொடங்கி அதன் 21 வயதில் கணக்கை முடிக்கும் போது மூன்று மடங்கு தொகை கிடைக்கிறது. உங்கள் பணம் 9.47 வருடங்களில் இரட்டிப்பாகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil