வங்கி மற்றும் தபால் அலுவலக சேமிப்பு கணக்குகள் குறைந்தபட்ச இருப்புடன் இருக்க வேண்டும் என நிபந்தனை உள்ளது. இதனை தீர்க்கும் பொருட்டு, தபால் அலுவலகத்தில் ஜீரோ பேலன்ஸ் சேமிப்புக் கணக்குகளை பொதுமக்கள் சிலர் திறக்க ஏதுவாக தபால் அலுவலக சேமிப்பு கணக்கு திட்டத்தின் விதிகளை அரசாங்கம் மாற்றியுள்ளது. தற்போது, தபால் அலுவலக சேமிப்புக் கணக்குகளுக்கு குறைந்தபட்ச இருப்புத் தேவையாக உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தொடங்கப்படும் கணக்குகளுக்கு குறைந்தபட்ச இருப்பு தேவையில்லை. மேலும், இந்த கணக்குகளுக்கு, அரசாங்கம் இறையாண்மை உத்தரவாதங்களை வழங்குகிறது, அதாவது தபால் அலுவலகம் கணக்கு வைத்திருப்பவர்களின் பணத்தை திருப்பித் தரத் தவறினால், கணக்கு வைத்திருப்பவர்களின் இழப்புகளை அரசாங்கம் ஈடுகட்டும்.
மேலும் ஒரு சிறப்பம்சமாக , ஒருவருக்கு பணம் எடுக்கும் வரம்பு ரூ .5,000 ல் இருந்து ரூ .20,000 ஆக கடந்த மாத அறிவிப்பின்படி உயர்த்தப்பட்டுள்ளது. நீண்ட காலமாக, தபால் அலுவலக கண்க்கில் பணம் எடுக்கும் வரம்பை உயர்த்த வேண்டும் என்று கூறிவந்த நிலையில் தற்போது உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள் வங்கிகளுடன் போட்டியிட உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜீரோ பேலன்ஸ் தபால் அலுவலக சேமிப்பு கணக்கிற்கு யார் தகுதியானவர்?
ஏப்ரல் 9, 2021 தேதியிட்ட நிதி அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, தபால் அலுவலக ஜீரோ பேலன்ஸ் கணக்கை திறக்க
ஏதேனும் ஒரு அரசாங்க நல திட்டங்களுக்காக பதிவுசெய்யப்பட்ட வயது வந்தவர் யார் வேண்டுமானாலும் திறக்கலாம்.
ஏதேனும் ஒரு அரசாங்க நல திட்டங்களுக்காக பதிவுசெய்யப்பட்ட மைனருக்காக அவரது பாதுகாவலர் திறக்கலாம்.
மேற்கண்ட நபர்கள் தங்கள் முதன்மை சேமிப்புக் கணக்காக பூஜ்ஜிய இருப்பு சேமிப்புக் கணக்கைத் திறக்கலாம். இருப்பினும், ஒரே ஒரு கணக்கை மட்டுமே திறக்க முடியும். இந்த கணக்கில் அரசாங்க நல திட்டங்களிலிருந்து மட்டுமல்லாமல் மற்றவர்களாலும் இயல்பாக டெபாசிட் செய்ய முடியும்.
ஓய்வூதியம், உதவித்தொகை அல்லது எல்பிஜி மானியம் போன்ற அரசாங்க நன்மைகளைப் பெறுபவர்கள், உங்கள் சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச நிலுவைத் தொகையை வைத்திருக்க விரும்பவில்லை என்றால், நீங்கள் தபால் அலுவலகத்தில் இந்த பூஜ்ஜிய இருப்பு கணக்கைத் திறக்கலாம்.
சேமிப்பு கணக்குகளை தபால் அலுவலக கிளைகளில் நேரடியாக திறப்பது எப்படி?
உங்கள் அருகிலுள்ள தபால் அலுவலக கிளைக்குச் செல்லவும்.
அங்கு வழங்கப்படும் இத்திட்டத்திற்கான படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும். அங்கு செல்லும்போது தேவையான KYC ஆவணங்கள் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை எடுத்துச் செல்லுங்கள்.
பின், தேவையான தொகையை பணமாக செலுத்துங்கள்.
சேமிப்புக் கணக்கு 2 - 3 வேலை நாட்களில் திறக்கப்படும்.
தபால் அலுவலக சேமிப்பு கணக்குகளை ஆன்லைனில் திறப்பது எப்படி?
தபால் அலுவலக அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லவும்.
'சேமிப்புக் கணக்கு' என்ற பகுதியைத் தேர்ந்தெடுக்கவும்.
இப்போது விண்ணப்பிக்கவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் பெயர், மொபைல் எண் உள்ளிட்ட தேவையான / கட்டாய விவரங்களை உள்ளிடவும்.
பின் 'சமர்ப்பி' என்பதைக் கிளிக் செய்து உங்கள் KYC ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் சரிபார்க்கவும்.
உங்கள் அனைத்து KYC ஆவணங்களையும் தபால் அலுவலகம் சரிபார்த்த பிறகு, உங்களுக்கு ஒரு காசோலை புத்தகம், ஏடிஎம் அட்டை, வங்கி மற்றும் மொபைல் வங்கி சேவைக்கான தகவல்கள் போன்றவற்றை அளிக்கும். தற்போது வரை இத்திட்டத்தில் ஆண்டுக்கு 4% வட்டி கிடைக்கிறது.
மேலும் ஜன-தன் யோஜனா திட்டம் அல்லது அடிப்படை சேமிப்பு வங்கி டெபாசிட் கணக்கின் கீழ், இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு பூஜ்ஜிய இருப்பு கணக்குகளை (பி.எஸ்.பி.டி.ஏ) திறக்க அனுமதித்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.