தபால் அலுவலகங்கள் நமக்கு பல்வேறு விதமான சிறப்பு சேமிப்பு திட்டங்களை வழங்குகின்றன. இந்த சேமிப்பு திட்டங்கள் முழுமையான பாதுகாப்பைக் கொண்டிருப்பதுடன், நல்ல வருமானத்தையும் தருகின்றன. மேலும் தபால் அலுவலகம் அனைத்து வயதினருக்குமான திட்டங்களையும் கொண்டுள்ளன.
இந்த கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் நீங்கள் தபால் அலுவலக திட்டங்களில் முதலீடு செய்தால், சில ஆண்டுகளில் நீங்கள் நல்ல வருவாயைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
நீங்கள் ரூ.10 லட்சம் முதலீடு செய்தால் 5 ஆண்டுகளில் உங்களுக்கு ரூ.14 லட்சம் திரும்பக் கிடைக்கும். இப்படியொரு நல்ல லாபம் தரும் திட்டத்தைப் பற்றி தெரிந்துக் கொள்வோம் வாருங்கள்.
இத்தனை லாபம் தரகூடிய அந்த திட்டம், தபால் அலுவலகம் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (எஸ்சிஎஸ்எஸ்). மூத்த குடிமக்களுக்கு என்று தபால் அலுவலகத்தால் வழங்கப்படும் சிறந்த முதலீட்டு திட்டம் இதுவாகும்.
இந்த திட்டத்தின் கீழ் ஒருவர் கணக்கைத் திறப்பதற்கான வயது 60 ஆண்டுகள் ஆக இருக்க வேண்டும். இந்தத் திட்டத்தில் 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள், அதே போல், வி.ஆர்.எஸ் எடுத்தவர்களும் இந்த திட்டத்தின் கீழ் ஒரு கணக்கைத் திறக்கலாம்.
இந்த திட்டத்தில் மொத்தமாக ரூ .10 லட்சம் முதலீடு செய்தால், 7.4 சதவீத வட்டி விகிதத்தின்படி, முதலீட்டாளர்களின் தொகை 5 ஆண்டுகளில் முதிர்ச்சியடைந்தவுடன் மொத்தம் ரூ .14,28,964 ஆக இருக்கும். இந்த வட்டி விகிதம் ஆண்டுதோறும் கூட்டப்படுகிறது. ஒரு முதலீட்டாளர், வட்டியாக ரூ.4,28,964ஐ பெறுவார்.
இந்த திட்டத்தில் ஒரு கணக்கைத் திறக்க குறைந்தபட்சம் ரூ .1000 இருந்தாலே போதும். இந்த கணக்கில் ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்யலாம். கணக்கைத் திறப்பதற்கான தொகை ரூ .1 லட்சத்துக்குக் குறைவாக இருந்தால், அதை பணமாக செலுத்தலாம். ஆனால் ரூ .1 லட்சத்துக்கும் அதிகமாக முதலீடு செய்யும்போது காசோலை மூலமாக மட்டுமே முதலீடு செய்ய முடியும்.
முதிர்வு காலம்
இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் மற்றும் முதலீட்டாளர் விரும்பினால் நீட்டிக்க முடியும். நீங்கள் இந்த திட்டத்தை முதிர்ச்சியடைந்த பின்னர் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியும். அதற்கு கணக்கு வைத்திருப்பவர் தபால் நிலையத்திற்குச் சென்று அதற்காக விண்ணப்பிக்க வேண்டும்.
வரி விலக்கு
இந்த திட்டத்தின் கீழ் உங்கள் வட்டி தொகை ஆண்டுதோறும் ரூ .10,000 ஐ தாண்டினால், டி.டி.எஸ் கழிக்கப்பட வேண்டும். இருப்பினும், எஸ்.சி.எஸ்.எஸ்ஸில் முதலீடு வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80 சி இன் கீழ் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கூட்டுக் கணக்கு
இந்த திட்டத்தின் கீழ், முதலீட்டாளர் தனது மனைவியுடன் ஒரு கூட்டாக ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை வைத்திருக்க முடியும். ஆனால், அதிகபட்ச முதலீட்டு வரம்பு 15 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கக்கூடாது.
முன்கூட்டிய நிறைவு
இந்த திட்டத்தில், முன்கூட்டியே மூடப்படுவதும் அனுமதிக்கப்படுகிறது. ஆனால் தபால் அலுவலகம் கணக்கு திறந்த 1 வருடத்திற்குப் பிறகு மூடப்படும் கணக்குகளுக்கு முதலீட்டுத் தொகையில் 1.5 சதவீத தொகையை கழித்துக் கொள்ளும். அதே நேரத்தில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு மூடப்படும் கணக்குகளுக்கு, வைப்புத்தொகையில் ஒரு சதவீதம் கழிக்கப்படும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil