Post Office Savings Scheme | நாடு முழுவதும் உள்ள பல்வேறு நிதி நிறுவனங்கள் மூலம் பல்வேறு அரசு ஆதரவு சேமிப்பு திட்டங்கள் கிடைக்கின்றன. ஒவ்வொரு திட்டமும் அதன் டெபாசிட் காலம், தகுதி அளவுகோல்கள், வைப்பு வரம்புகள் மற்றும் வட்டி விகிதங்கள் போன்றவற்றில் வேறுபடுகின்றன.
அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட இந்தத் திட்டங்கள், சமூகத்தின் பல்வேறு பிரிவுகளுக்கு சேவை செய்கின்றன. குறிப்பாக சில திட்டங்கள் மூத்த குடிமக்களுக்காகவும், சில திட்டங்கள் மகளிருக்காகவும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
மேலும், விவசாயிகள், ஊதியம் பெறும் பணியாளர்களில் உள்ள தனிநபர்களுக்காகவும் வடிவமைக்கப்பட்ட சிறப்புத் திட்டங்கள் இங்கு உள்ளன.
வட்டி திருத்தம்
இந்த நிலையில் அஞ்சல திட்டங்கள் ஒவ்வொரு காலாண்டில் வட்டி விகிதத்தை திருத்தி வருகின்றன. அந்த வகையில், ஏப்ரல் 1, 2024 முதல் காலாண்டில் தபால் அலுவலக சேமிப்பு, மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டங்கள் (SCSS) மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) ஆகியவற்றுக்கான வட்டி விகிதங்கள் மாறாமல் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஜனவரி-மார்ச் 2024க்கான இரண்டு சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு 10-20 அடிப்படைப் புள்ளிகளால் உயர்த்தியது.
பி.பி.எஃப் திட்டம்
இந்தத் திட்டத்தில், ஒரு நிதியாண்டில் குறைந்தபட்ச வைப்புத் தொகை ரூ 500 மற்றும் அதிகபட்ச வைப்புத் தொகை ரூ 1,50,000 ஆகும். திட்டத்தில், 3வது நிதியாண்டு முதல் 6வது நிதியாண்டு வரை கடன் வசதி கிடைக்கும்.
மேலும், இந்தத் திட்டம் I.T. Act இன் Sec.80-C இன் கீழ் டெபாசிட் கழிக்கத் தகுதி பெறுகிறது. திட்டத்தின் வட்டி 7.1 சதவீதம் ஆகும். இந்தத் திட்டத்தில் முதிர்ச்சியடைந்த பிறகு, கணக்கை எந்த எண்ணுக்கும் 5 ஆண்டுகளுக்கு மேலும் வைப்புத்தொகையுடன் நீட்டிக்க முடியும்.
சுகன்யா சம்ரிதி யோஜனா
சுகன்யா சம்ரித்தி கணக்கு வட்டி விகிதம் ஏப்ரல் 01 முதல் ஜூன் 30, 2024 வரை 8.20% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில், ஒரு நிதியாண்டில் குறைந்தபட்ச வைப்புத் தொகை ரூ 250 மற்றும் அதிகபட்ச வைப்புத் தொகை ரூ 1.5 லட்சம் ஆகும்.
மேலும், கல்விச் செலவுகளைச் சமாளிக்க கணக்கு வைத்திருப்பவரின் உயர்கல்விக்கு திரும்பப் பெறுதல் அனுமதிக்கப்படும். ஐ.டி. சட்டத்தின் பிரிவு -10 இன் கீழ் கணக்கில் பெறப்படும் வட்டி வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
கிஷான் விகாஸ் பத்ரா
இந்தத் திட்டத்தில் டெபாசிட் லிமிட் கிடையாது. குறைந்தப்பட்சம் ரூ.1000 மற்றும் ரூ.100ன் மடங்குகளில் சேமிப்பை தொடங்கலாம். இந்தக் கணக்கு 10 ஆண்டுக்குள் இரட்டிப்பு ஆகிவிடும்.
தற்போதுள்ள வட்டி விகிதத்தின்படி கணக்கு 115 மாதங்களில் இரட்டிப்பு ஆகிவிடும். இந்தத் திட்டத்தில் 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
அதேபோல் 5 ஆண்டு ஆர்.டி. திட்டத்துக்கு 6.7 சதவீதம் வட்டி வழங்கப்பட உள்ளது. போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு கணக்குக்கு 4 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“