Post Office Vs Bank Deposits: Why Post Office Is Better Choice : சம்பாதித்த பணத்தை சேமித்து வைப்பதும், அதில் இருந்து மீண்டும் வருமானம் கிடைக்கும் வகையில் முதலீடு செய்வதும் இன்று இல்லை என்றாலும் வருங்காலத்திற்கு மிகவும் உதவிகரமானதாக இருக்கும். பலரும் பெரிய வங்கிகளின் ஃபிக்ஸ்ட் டெபாசிட் திட்டங்களை தேர்வு செய்கிறார்கள். ஆனால் சில பெரிய வங்கிகள் தரும் வட்டி விகிதத்தைக் காட்டிலும் தபால் நிலைய சேமிப்புகள் மிக அதிக அளவில் வாடிக்கையாளர்களுக்கு நன்மை தருகிறது.
ஐ.சி.ஐ.சி.ஐ, எஸ்.பி.ஐ மற்றும் எச்.டி.எஃப்.சி போன்ற வங்கிகளில் வைக்கப்படும் நிலையான வைப்பு நிதிக்கு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு வட்டியானது 4.90% தான். 2 முதல் மூன்று ஆண்டுகள் செல்லும் போது எஸ்.பி.ஐ மட்டுமே 5.20% வட்டி வழங்குகிறது. ஆனால் மற்ற இரண்டு வங்கிகளும் 5.15% வட்டியையே வழங்குகின்றன. ஐந்து ஆண்டுகளுக்கு மேலே செல்லும் போது தான் எஸ்.பி.ஐ வங்கி 5.40%, எச்.டி.எஃப்.சி. வங்கி கொஞ்சம் அதிகமாக 5.50% வட்டியை தருகிறது. ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி 5.25% வட்டியை வழங்குகிறது.
ஆனால் இந்த வங்கிகள் வழங்கும் வட்டி விகிதத்தைக் காட்டிலும் தபால் நிலையங்கள் கூடுதலாக வட்டியை வழங்குகிறது. முதல் 3 ஆண்டுகளுக்கான வட்டியே 5.50% ஆகும். 5 ஆண்டுகளுக்கு மேலே செல்லும் போது அதன் வட்டியானது 6.80% ஆக உள்ளது. தேசிய சேமிப்பு திட்டத்திற்கு இணையாக தபால் நிலையங்களும் வாடிக்கையாளர்களுக்கு வட்டியை வழங்குகிறது.
வருமான வரிச்சட்டம் Sec80C கீழ் கிஷான் விகாஸ் பத்ரா, பி.பி.எஃப். மற்றும் தேசிய சேமிப்பு சான்றிதழ் போன்ற சேமிப்புத் திட்டங்களுக்கு வரி விலக்கும் உண்டு. நீண்ட கால சேமிப்புத் திட்டத்தை கணக்கில் கொண்டு நீங்கள் முதலீடு செய்ய வேண்டும் என்றால் வங்கிகளைக் காட்டிலும் இந்த திட்டங்கள் உங்களுக்கு சிறந்த பலனை வழங்கும் என்பதில் சந்தேகமில்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil