கோவையில், பிராய்லர் ஒருங்கிணைப்புக் குழு, பவுல்ட்ரி கேர் மற்றும் பவுல்ட்ரி பார்மர்ஸ் ரெகுலேட்டரி கமிட்டி ஆகிய அமைப்புகள் இணைந்து கோழிப்பண்ணை மற்றும் கோழிவளர்ப்பு தொழில்நுட்ப மாநாடு மற்றும் கண்காட்சியை நடத்தினர்.
"மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய நவீன தொழில்நுட்பத்தின் மூலம் கோழிப்பண்ணைத் தொழிலை மேம்படுத்துதல்" என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற இந்த நிகழ்வில், கோழிப்பண்ணை தொழிலின் அனைத்து பிரிவிலும் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதன் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
இதில் கோழிப்பண்ணையாளர்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள், மாணவர்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், தொழில் வல்லுநர்கள், முதலீட்டாளர்கள், கால்நடை மருத்துவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். குறிப்பாக, தமிழ்நாடு மட்டுமின்றி தெலங்கானா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து நடந்த செய்தியாளர் சந்திப்பில் பி.எப்.ஆர்.சி. அமைப்பின் மேலாண்மை ஆலோசகர் ராம்ஜி ரகுநாதன் கலந்து கொண்டு பேசினார். அப்போது, "கோழி வளர்ப்பில் தமிழ்நாடு தேசிய அளவில் சிறந்து விளங்குகிறது. பல ஆண்டுகளாக தமிழ்நாடு இந்தத் துறையில் முதலிடம் பெற்று வருகிறது.
இந்த வளர்ச்சியைத் தொடர்ந்து தக்கவைக்க, இத்துறையின் அனைத்து பிரிவுகளிலும் நவீன தொழில்நுட்பத்தை புகுத்துவது மிக அவசியம். இன்று நடைபெறும் நிகழ்வில் பங்கேற்கக்கூடிய அனைவரும் பல்வேறு தகவல்களை தெரிந்து கொண்டனர்.
40 ஆண்டுகளுக்கு முன்பு கோழி வளர்ப்பு குறைவாக இருந்த நிலையில், அதன் தாக்கம் தற்போது மாநிலம் முழுவதும் விரிவடைந்துள்ளது. பல விவசாயிகளும் இதில் ஆர்வம் காட்டுகின்றனர்" எனத் தெரிவித்தார்.
செய்தி - பி. ரஹ்மான்