PPF அல்லது பொது வருங்கால வைப்பு நிதி என்பது நீண்ட கால அடிப்படையில் மிகச் சிறந்த முதலீட்டுத் திட்டமாகும். பாதுகாப்பான கணிசமான வருவாய் கொடுக்கும் முதலீடு என்பதால் நீண்ட கால நோக்கங்களுக்காக குறிப்பாக ஓய்வு காலத்திற்காக முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு இந்த திட்டம் ஒரு வரப்பிரசாதமாக உள்ளது. பிபிஎஃப் கணக்கைத் துவங்க குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் அதிகபட்சமாக 1.5 லட்சம் வரையில் செலுத்திக் கொள்ளலாம். இந்த திட்டத்தின் சிறப்புகள் குறித்து பார்க்கலாம்.
வரி சலுகை என்ன?
பொது வருங்கால வைப்பு நிதி அதன் சந்தாதாரர்களுக்கு வருமான வரிச் சட்டத்தின் விலக்கு-விலக்கு-விலக்கு (EEE) பிரிவின் கீழ் வருவதால் பலவிதமான நன்மைகளை வழங்குகிறது. அரசின் இந்த சேமிப்பு திட்டத்தில் வருமான வரி பிரிவு 80சியின் கீழ் வரி சலுகை உண்டு. இது 1.5 லட்சம் வரையில் வரிச்சலுகை பெற முடியும். மேலும் இந்த முதலீட்டுக்கான வட்டிக்கு வரி செலுத்தத் தேவையில்லை. தற்போது பெரும்பாலான பெரிய வங்கிகள் தங்கள் 5 ஆண்டு வரி சேமிப்பு எஃப்.டி.களில் 5.5 சதவீதம் அல்லது குறைந்த வட்டி விகிதத்தை அளிக்கும்போது, பிபிஎஃப் வழங்கும் வட்டி விகிதம் நிச்சயமாக ஒரு நல்ல பிரீமியத்துடன் வருகிறது.
அதிக வட்டி விகிதம்
அரசின் இந்த பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் உள்ள முக்கிய அம்சமே வட்டி விகிதம் தான். PPF மீதான தற்போதைய வட்டி விகிதம் 7.1 சதவீதமாகும் (மார்ச் 31, 2021 உடன் முடிவடைந்த காலாண்டில்) .இது மற்ற வங்கி மற்றும் சிறிய சேமிப்பு திட்டங்களில் வழங்கப்படும் வட்டியை விட அதிகமாகும். இந்த தொகை முற்றிலும் வரிவிலக்கு கொண்டது மற்றும் பணம் ஆண்டுதோறும் கூடும் என்பதன் மூலம் நன்மைகள் கிடைக்கின்றன. சுயதொழில் செய்பவர்கள் கூட இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். PPF மீதான வட்டி விகிதத்தினை அரசு சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, ஒவ்வொரு காலாண்டிலும் மாற்றியமைக்கிறது. அதன்படி, முதலீட்டின் வட்டி விகிதம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கிறது. மற்ற சேமிப்புகளில் முழு முதலீட்டிற்கும் சேர்த்து வட்டி விகிதம் நிர்ணயிக்கப்படும். குறைந்த வட்டிக்கு முதலீடு செய்து நீண்ட காலத்திற்கு சேமிப்பதால் இழப்பு ஏற்படும்.
ரூ50,000 வீதம் முதலீடு… ரூ14 லட்சம் வரை ரிட்டன்…
இந்த திட்டம் 15 ஆண்டுகால திட்டமாகும். ஆனால் இந்த திட்டம் முதிர்வடைந்த ஒரு வருட காலத்திற்குள் மேற்கொண்டு 5 வருடங்கள் அல்லது அதற்கு மேலும் நீட்டிக்கப்படலாம். நீங்கள் இந்த திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் 50,000 ரூபாய் முதலீடு செய்யும்போது, வட்டி விகிதம் 7.1 சதவீதமாக இருந்தால், 15 ஆண்டுகளில் ரூ .14.06 லட்சம் கிடைக்கும். இருப்பினும், நீங்கள் இதை இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்தால் இந்த தொகை ரூ. 22.69 லட்சமாக அதிகரிக்கும். இதுபோன்ற மூன்று நீட்டிப்புகள் மற்றும் மொத்த முதலீட்டு காலம் 30 ஆண்டுகள் மூலம் ரூ .52 லட்சம் கிடைக்கும்.
ஒவ்வொரு ஆண்டும் அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்ட ரூ .1.5 லட்சத்தை முதலீடு செய்தால், 15 ஆண்டுகளில் ரூ .42.18 லட்சம் கிடைக்கும்.மேலும் நீட்டிப்புகளுடன் 30 ஆண்டு காலத்திற்கு ரூ .1.56 கோடியை சேமிக்க முடியும்.
கடன் எப்போது பெற முடியும்
பிபிஎஃப் கணக்கைத் துவங்கிய 3வது ஆண்டிலிருந்து கடன் பெறலாம். நிலுவைத் தொகையில் 25% முதல் நிதியாண்டின் இறுதியில் கிடைக்கப்பெறும். பிபிஎஃப் வட்டி விகிதத்திற்கு மேல் கடன் மீதான வட்டி விகிதம் ஆண்டுக்கு 2 % இருக்கலாம்.
எப்படி கணக்கு தொடங்குவது?
அரசின் இந்த பொது வருங்கால வைப்பு நிதி கணக்கினை அஞ்சலகம், பொதுத்துறை வங்கிகள் மற்றும் சில முன்னணி தனியார் வங்கிகள் மூலமும் தொடங்கிக் கொள்ளலாம். குறிப்பாக தனியார் வங்கிகளில் ஆக்ஸிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட சில வங்கிகளில் தொடங்கி கொள்ள முடியும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.