மத்திய அரசின் பிரதான் மந்திரி ஷ்ராம் யோகி மந்தன் திட்டம் பிப்ரவரி 2019-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் 10 கோடி அமைப்பு சாரா தொழிலாளர்கள் பயனடைவார்கள் என்று, 2019 – 2020ம் ஆண்டு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்த அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
பிரதான் மந்திரி ஷ்ராம் யோகி மந்தன் திட்டத்தின் கீழ் வீட்டுத் வேலை செய்பவர்கள், ரிக்ஷா இழுப்பவர்கள் மற்றும் குறைந்த ஊதியம் பெறுபவர்களுக்கு 60 வயதிலிருந்து மாதந்தோறும் ரூ .3,000 ஓய்வூதியம் பெறும் வகையிலான உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. கரோனா பொதுமுடக்க காலத்தில் அவர்கள் அதிக வருவாய் இழப்பை சந்திக்க நேரிட்டது.
18 முதல் 40 வயதுவரை உள்ள மாதம் ரூ.15,000-க்கும் குறைவாக ஊதியம் பெறுபவர்கள் இத்திட்டத்தில் இணையலாம். பயனாளர்களின் ஓய்வுக்கு பிறகான வருவாய்க்கு மத்திய அரசு போதிய பங்களிப்பை அளிக்கிறது. 18 வயதுடைய நபர் இத்திட்டத்தில் இணைந்து மாதம் ரூ.55 மாத சந்தாவாக செலுத்தினால், 60 வயதிற்கு பிறகு அவர்களுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் வழங்கப்படும். இந்தத் திட்டம் பிப்ரவரி 15ஆம் தேதி 2019-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.
மத்திய தொழிலாளர் அமைச்சகத்தின் தகவலின்படி, கடந்த 2020 மார்ச் 31 வரை 43,64,744 பயனாளர்கள் இருந்த நிலையில், 2021 மார்ச் 31 நிலவரப்படி இது 44,94,864 ஆக உயர்ந்துள்ளது. இது குறித்து எக்ஸ்.எல்.ஆர்.ஐ. பேராசிரியர் சியாம் சுந்தர் கூறுகையில், இத்திட்டத்தின் கீழ் குறைந்த பயனாளர்களே உள்ளனர். இத்திட்டத்தின் கீழ் போதிய மாத ஓய்வூதியம் வழங்கப்படாது என்ற நம்பிக்கையின்மை நிலவுவதே மாதாந்திர சந்தா செலுத்தாததற்காக காரணம். மேலும், குறைந்த அளவிலான பலன், நிச்சயமற்ற எதிர்காலம் மற்றும் வேலையின்மை ஆகியவற்றாலும் குறைந்த அளவிலான பயனாளர்களே இத்திட்டத்தில் இணைந்துள்ளனர்.
மேலும் இதேபோன்று, 2019 ஜூலை 22 முதல் கொண்டுவரப்பட்ட பிரதான் மந்திரி லாகு வியாபரி மன்-தன் யோஜனா, திட்டத்திலும் குறைந்த அளவிலானோரே இணைந்துள்ளனர். இதுவரை 43,751 பேர் மட்டுமே இணைந்துள்ளனர். இந்த ஓய்வூதிய திட்டத்தின் கீழ், ஆண்டு வருவாய் ரூ .1.5 கோடிக்கு மிகாமல் இருக்கும் சிறு வணிகர்கள், சில்லறை வர்த்தகர்கள், மற்றும் சுயதொழில் செய்பவர்கள் சேரலாம். அவர்களின் வயது வரம்பு 18-40க்குள் இருக்க வேண்டும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil