பி.எஃப் சந்தாதாரர்கள் தங்கள் ஓய்வுக்கால சேமிப்பில் மேம்பட்ட வருமானத்தை எதிர்பார்க்கிறார்கள். இந்நிலையில், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் நடப்பு நிதியாண்டில் சுமார் 8% ஆக இருக்கும்.
இது, 2021-22 க்கு அறிவிக்கப்பட்ட 8.1% வட்டி விகிதத்திற்கு ஏற்ப இருக்கும். இந்தப் பிரச்னை மார்ச் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) மத்திய அறங்காவலர் குழு கூட்டத்தில் எடுக்கப்படும் என்று தெரிகிறது.
இது தொடர்பாக கூட்டத்தின் தேதி குறித்து அறங்காவலர்களுக்கு EPFO கடிதம் அனுப்பியுள்ள நிலையில், சரியான நிகழ்ச்சி நிரல் மற்றும் இடம் தற்போது வரை இறுதி செய்யப்படவில்லை. அடுத்த சில நாட்களில் நிகழ்ச்சி நிரலில் மேலும் தகவல் பரிமாற்றம் எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் பூபேந்தர் யாதவ் தலைமையில், EPFO இன் உச்ச முடிவெடுக்கும் அமைப்பான CBT, கடைசியாக அக்டோபர் 31, 2022 அன்று கூடியது. அதைத் தொடர்ந்து ஜனவரியில் திட்டமிடப்பட்ட கூட்டம் நடைபெறவில்லை.
EPFO இன் 68 மில்லியன் சந்தாதாரர்கள் பி.எஃப்.பில் நல்ல வட்டியை எதிர்பார்க்கின்றனர். அவர்கள் அதீத பணவீக்கம் தங்களின் சேமிப்பை கரைத்துவிடும் என அஞ்சுகிறார்கள்.
ஓய்வூதிய நிதி அமைப்பு 2020-21 இல் 8.5% ஆக இருந்த நிலையில், 2021-22ல் 45 ஆண்டு குறைந்த வட்டி விகிதத்தை 8.1% என அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/