பட்ஜெட் 2018 : பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் இணைப்பு

மோடி அரசுக்கு இதுபோன்ற ஒரு முயற்சி நடைமுறை சாத்தியமா என கேட்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்

2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் மத்திய அரசின் 3 பொதுக்காப்பீட்டு நிறுவனங்களை ஒன்றாக இணைத்து பங்குசந்தையில் களமிறக்க உள்ளதாக அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தற்போது நேஷனல் இன்சூரன்ஸ், யுனைடெட் இன்சூரன்ஸ், ஓரியண்டல் இன்சூரன்ஸ் என 3 பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளன. இவை மருத்துவ காப்பீடு, விபத்துக் காப்பீடு, சொத்து மற்றும் நிறுவனங்களுக்கான, பல்வேறு வகை காப்பீட்டுப் பாலிசிகளை விற்பனை செய்து வருகின்றன. தனியார் நிறுவனங்கள், காப்பீட்டு துறையில் அனுமதிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனாலும் கூட, மத்திய அரசு நிறுவனங்களான இந்த 3 நிறுவனங்கள் தான் இன்று சந்தையின் பெரும் பங்கை தங்கள் வசம் வைத்துள்ளன.

பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்து, மத்திய அரசுக்கு தேவையான நிதியைத் திரட்டும் பங்கு விலக்கல் வழிமுறையின்படி, நிதியமைச்சர் மேற்கண்ட முடிவை எடுத்துள்ளார். தற்போது முழுமையாக மத்திய அரசு வசமுள்ள இந்த 3 பொதுத்துறை நிறுவனங்களையும் இணைப்பதும், அதன் பிறகு, அதை சந்தையில் களம் இறக்குவதும் மிக நல்ல யுக்தி எனவும். இது ஜெட்லி எதிர்பார்க்கும் அளவு நல்ல வருவாயைப் பெற்றுத் தர எடுக்கப்பட்டுள்ள புத்திசாலித்தனமான முடிவு எனவும் பங்குசந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும், இந்த முயற்சியை காப்பீட்டுத்துறையில் உள்ள வலுவான தொழிற்சங்கங்கள் ஏற்க மறுக்கும் என்பதோடு, இந்த முயற்சியைத் தடுக்க வேலை நிறுத்தம் உள்ளிட்ட முயற்சிகளும் நடக்கும் வாய்ப்புகள் உள்ளன என்கிறார்கள் நிபுணர்கள். இந்த எதிர்ப்பைத் தாண்டி, தனது திட்டத்தில் அருண் ஜெட்லி வரும் நிதியாண்டிலேயே எவ்வளவு தூரம் முன்னேறப் போகிறார் என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.

அதுவும், 2019 பொதுத் தேர்தலுக்காக, மீண்டும் மக்களைச் சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள மோடி அரசுக்கு இதுபோன்ற ஒரு முயற்சி நடைமுறை சாத்தியமா என கேட்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

×Close
×Close