பொதுத்துறை வங்கிகளில் சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை (Minimum Balance) பராமரிக்கும் விதிமுறையை நீக்குவது குறித்து வங்கிகள் பரிசீலித்து வருகின்றன. மொத்த வைப்புத் தொகையில் நடப்பு கணக்கு மற்றும் சேமிப்பு கணக்குகளின் பங்கு குறைந்து வருவது குறித்து நிதி அமைச்சகத்துடன் நடந்த விவாதங்களை தொடர்ந்து, இது மறுபரிசீலனை செய்யப்படுகிறது என டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கனரா வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் இந்தியன் வங்கி ஆகியவை சமீபத்தில் இந்த விதிமுறையை நீக்கியுள்ளன. இதன் பொருள், வாடிக்கையாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச இருப்பை பராமரிக்க தவறினால் அபராதம் செலுத்த வேண்டியதில்லை.
சமீபத்திய கூட்டத்தில், நிதி அமைச்சக அதிகாரிகள், குறைந்தபட்ச இருப்பை பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிப்பதன் அவசியம் குறித்து வங்கிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். நடப்பு கணக்கு மற்றும் சேமிப்புக் கணக்கு வைப்புத் தொகைகளில் ஏற்பட்ட மந்தநிலை காரணமாக இந்த கவலை எழுந்துள்ளது.
முன்னதாக, குறைந்தபட்ச இருப்பு தொகையை பராமரிக்க வேண்டிய தேவை இல்லை என்று 2020-ஆம் ஆண்டிலேயே எஸ்.பி.ஐ வங்கி அறிவித்திருந்தது. இருப்புத் தொகையை பராமரிக்காததற்காக வசூலிக்கப்பட்ட கட்டணங்கள், அதன் நிகர லாபத்தை விட அதிகரித்து விட்டதாக ஒரு ஆர்.டி.ஐ அறிக்கையில் கண்டறியப்பட்டது.
வங்கிகள், இலவசமாக வழங்கப்பட்ட சேவைகளுக்கு குறைந்த வட்டி சேமிப்புக் கணக்குகளிலிருந்து கிடைக்கும் வருவாயை பயன்படுத்தின. இருப்பினும், பெரும்பாலான வங்கி சேவைகள் இப்போது டிஜிட்டல் வழிகள் மூலம் வழங்கப்படுவதால் வங்கிகளுக்கு கூடுதல் செலவுகள் குறைந்துள்ளன.
கணக்குகளை பராமரிப்பதற்கான செலவுகளை, டெபிட் கார்டு கட்டணங்கள் மற்றும் இலவச வரம்புகளுக்கு அப்பாற்பட்ட பரிவர்த்தனைகளுக்கான கட்டணங்கள் போன்ற பிற வழிகளில் வசூலிப்பதே புதிய அணுகுமுறையாகும்.