ரயில்வே துறைக்கு விளம்பரம் மூலம் 39,000 கோடி ரூபாய் திரட்டும் யோசனை சிக்கலில்!

சந்திரன் ஆர்

ரயில் பெட்டிகள் மற்றும் ரயில் நிலையங்கள் தவிர்த்த, மற்ற இடங்களில் விளம்பரம் செய்வதன் மூலம் அடுத்த 10 ஆண்டுகளில் 39 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் வருவாய் பெற திட்டமிட்ட, இந்திய ரயில்வேயின் யோசனை முடங்கியுள்ளது. சுரேஷ் பிரபு ரயில்வே அமைச்சராக இருந்தபோது இதற்கான வரைவு திட்டம் தயார் செய்யப்பட்டது. இதன்படி, ரயில் பாதைகள், லெவல் கிராஸிங்குகள், மேம்பாலங்கள் உள்ளிட்ட இன்னும் பல ரயில் சொத்துகளில் விளம்பரங்கள் வெளியிட தனியாரை அனுமதிப்பதன் மூலம் ரயில் கட்டணம் அல்லாத வகையில் கணிசமான வருவாயை ரயில்வே துறைக்கு ஈட்ட யோசனை முன்வைக்கப்பட்டு, பணிகள் நடந்து வந்தன. தேசிய அளவில் இந்த பணிகளை ஒருங்கிணைத்து கண்காணிக்கவும், அமலாக்கவும் தனி அலுவலகமும் ஏற்படுத்தப்பட்டது.

ஆனால், எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்காத காரணத்தால், இந்த பணியை முன்னெடுப்பதாக இருந்த RITES என்ற ரயில்வே துறையின் மற்றொரு துணை நிறுவனத்திடம் இருந்து இப்போது இந்த பணிகள், அந்தந்த ரயில்வே மண்டலங்களிடமே வழங்கலாம் என தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது ரயில்வே அமைச்சகராக உள்ள பியுஷ் கோயல் நிர்வாகத்தில் இந்த மாற்றம் அண்மையில் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, விளம்பர வருவாய் பெறும் முயற்சி முற்றிலும் கைவிடப்படவில்லை என்றாலும், அது மீண்டும் அந்தந்த மண்டல அளவில் முடிவு செய்யப்படும் விஷயமாக மாறுவதால், மீண்டும் புதிதாக இதற்கு டெண்டர் கோரி… அதற்கான பணிகள் தொடங்க எப்படியும் ஓராண்டாவது தமாதமாகும் என சொல்லப்படுகிறது.

×Close
×Close