ரயில்வே துறையை தனியார் மயமாக்குவது என்ற கேள்விக்கே இடமில்லை என்று ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் மக்களவையில் தெரிவித்திருக்கிறார். அதேசமயம், ரயில்வேயை நவீனமயமாக்க தனியார் முதலீடுகள் அவசியம் என்றும் கூறியுள்ளார்.
ரயில்வே பட்ஜெட் குறித்து கேள்வி எழுப்பிய காங்கிரஸ், “500 ரயில் நிலையங்கள் நவீன மயமாக்கப்படும் என்று சொன்னது என்ன ஆனது? இவற்றைவிடுத்து, இப்போது அடுத்த 10 ஆண்டுகளில், ரயில்வேயில் 50 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் என்கிறீர்களே?, அதற்கு பணம் எங்கிருந்து வரும்? ரயில்வே துறையை தனியார்மயமாக்க மத்திய அரசு முயற்சி செய்கிறதா? என்று மக்களவையின் காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சௌத்ரி கேள்வி எழுப்பி இருந்தார்.
இதுகுறித்து மக்களவையில் பதிலளித்து பேசிய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், “ரயில்வேயை தனியார்மயமாக்குவது என்ற கேள்வியே கிடையாது. ரயில்வே துறை தனியார் மயமாக்கப்படாது. இருப்பினும், ரயில்வேயில் வசதிகளை அதிகரிக்க வேண்டுமெனில், நமக்கு முதலீடுகள் அதிகம் தேவைப்படுகிறது. புதிய திட்டங்களின் போது, நாம் தனியார் முதலீடுகளுக்கு அழைப்பு விடுக்கப் போகிறோம். பொது – தனியார் கூட்டு மூலம் ரயில்வேயின் தரத்தை மேம்படுத்துவது என்ற முடிவை எடுத்திருக்கிறோம் என்றார்.
மேலும் அவர் கூறுகையில், 1950 – 2014 காலக்கட்டங்களில் 77,609 கி.மீ. என்ற தண்டவாளங்களின் அளவு 89,919 கி.மீ. என்ற அளவிலேயே அதிகரிக்கப்பட்டது. ஆனால், கடந்த 5 வருடங்களில் மட்டும் 1,23,236 கி.மீ என்று அதிகரிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் ஆட்சியில் ஒரு ரயில் பெட்டி கூட ரே பரேலி நவீன கோச் தொழிற்சாலையில் உருவாக்கப்பட்டது கிடையாது. 2014 ல் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு தான் அந்த தொழிற்சாலையில் உற்பத்தியே தொடங்கியது. தற்போது, 50,000 பெட்டிகள் வரை தயாரிக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளோம். அதுமட்டுமின்றி, வெளிநாடுகளுக்கு அந்த பெட்டிகளை ஏற்றுமதி செய்யவும் முடிவு செய்துள்ளோம்.
ரயில்வே துறையில் கார்ப்பரேட்களை உள்ளே கொண்டு வந்ததே முதலில் காங்கிரஸ் தான். இப்போது, எங்களை குறை கூறுவது போல முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள். தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவு அளிப்பது மூலம், வெளிநாடுகளில் இருந்தும் முதலீடுகளை பெற முடியும், வெற்றியாளர்களுக்கும், தோல்வி பெறுபவர்களுக்கும் ஒரேயொரு வித்தியாசம் தான். தோல்வியாளர்கள் கடினமான விஷயங்களை மட்டுமே பார்ப்பார்கள்; ஆனால் வெற்றியாளர்கள் தங்கள் இலக்கில் மட்டுமே குறியாக இருப்பார்கள்” என்றார்.