/indian-express-tamil/media/media_files/2025/07/22/ramalinga-raju-satyam-computers-rs-7-000-crore-fraud-scam-tamil-news-2025-07-22-18-13-03.jpg)
2001 ஆம் ஆண்டு சத்யம் கம்ப்யூட்டர்ஸ் உலகளாவிய அளவில் முன்னேறி, நியூயார்க் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு, இந்தியாவின் முன்னணி ஐ.டி நிறுவனங்களில் ஒன்றாக தன்னை நிலைநிறுத்தியது.
இந்தியா இதுவரை ஏராளமான நிதி தொடர்பான மோசடிகளை கண்டுள்ளது. அதன் வரலாற்றிலேயே மிகப் பெரிய ஐ.டி நிறுவன மோசடியை சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனம் செய்திருப்பதாக அறியப்படுகிறது. ரூ. 7,136 கோடி எனும் மலைக்க வைக்கும் தொகையை விழுங்கி இருக்கிறார் அந்த நிறுவனத்தின் நிறுவனர் ராமலிங்க ராஜு. அவரின் பின்னணி என்ன? கோடிக்கணக்கில் மோசடி அரங்கேறியது எப்படி? என்று இங்குப் பார்க்கலாம்.
இன்றைய ஆந்திரப் பிரதேசம் மாநிலம் பீமாவரம் பகுதியைச் சேர்ந்தவர் தான் ராமலிங்க ராஜு. 1954-ல் விவசாயக் குடும்பத்தில் பிறந்து படிப்பில் சிறந்து விளங்கிய அவர், விஜயவாடாவில் உள்ள ஆந்திர லயோலா கல்லூரியில் வணிகவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். பின்னர் அமெரிக்காவில் உள்ள ஓஹியோ பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ பட்டம் பெற்றார். தனது படிப்பை முடித்த கையுடன் சொந்த நாடு திரும்பிய அவர், தனது 22 வயதில் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இதன்பிறகு, சொந்தமாகத் தொழில் தொடங்கிய அவர் முதலில் ஹோட்டல் துறையில் நுழைந்து, பிறகு பருத்தி நிறுவனத்தைத் தொடங்கி இருக்கிறார். அதன்பிறகு மெய்டாஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தையும் நிறுவியுள்ளார். 1987 ஆம் ஆண்டில், தனது மைத்துனர் டி.வி.எஸ். ராஜுவின் ஆலோசனைப் படி ராமலிங்க ராஜு ஐ.டி. துறையில் கால் பதித்து, 'சத்யம் கம்ப்யூட்டர்ஸ்' நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார்.
இந்த நிறுவனம், 1990-களிலும், 2000களிலும் இந்தியாவின் முன்னணி ஐ.டி சேவை நிறுவனங்களில் ஒன்றாக இருந்தது. சாப்ட்வேர் டெவலப்மென்ட், பிசினஸ் புராசஸ் அவுட்சோர்சிங், மற்றும் தகவல் தொழில்நுட்பக் கன்சல்டிங் ஆகியவை இந்த நிறுவனத்தின் முக்கிய அம்சங்களாக இருந்துள்ளது. உலகளாவிய நிறுவனங்கள் உட்பட, அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் மத்திய கிழக்கு ஆகிய பகுதிகளில் வாடிக்கையாளர்களாக இருந்தது.
1991 ஆம் ஆண்டில், ராமலிங்க ராஜு தனது நிறுவனத்தை மும்பை பங்குச் சந்தையில் பதிவு செய்து, ஐ.பி.ஓ-வைத் தொடங்கி இருக்கிறார். அன்றைய காலக்கட்டத்தில் ஐ.டி நிறுவனங்களின் தேவை மிக அதிகமாக இருந்ததால், அவரது நிறுவனத்தின் ஐ.பி.ஓ 17 மடங்கு அதிகமாகப் பெற்றது. இதன் மூலம் அந்த நிறுவனம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெற்று, வேகமாக முன்னேறியது.
2000 ஆம் ஆண்டு வாக்கில், இன்ஃபோசிஸ், விப்ரோ மற்றும் டிசிஎஸ் ஆகியவற்றைத் தொடர்ந்து இந்தியாவின் நான்காவது பெரிய ஐ.டி நிறுவனமாக சத்யம் கம்ப்யூட்டர்ஸ் மாறியது. மக்கள் அதன் நிறுவனர் ராமலிங்க ராஜுவை, செகந்திராபாத்தின் 'பில் கேட்ஸ்' என்று அழைக்கத் தொடங்கினர். நிறுவனத்தின் வருவாய் முதலில் ரூ.4,900 கோடியை (1 பில்லியன் டாலர்கள்) எட்டியது. பின்னர் 2008 ஆம் ஆண்டு வாக்கில் ரூ.9,800 கோடியாக (2 பில்லியன் டாலர்கள்) இரட்டிப்பாகியது. அப்போது, சத்யம் கம்ப்யூட்டர்ஸ் உலகளவில் 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் வணிகம் செய்து வந்தது.
2001 ஆம் ஆண்டு சத்யம் கம்ப்யூட்டர்ஸ் உலகளாவிய அளவில் முன்னேறி, நியூயார்க் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு, இந்தியாவின் முன்னணி ஐ.டி நிறுவனங்களில் ஒன்றாக தன்னை நிலைநிறுத்தியது. இதனால், அந்த நிறுவனம் பண மழையில் நனைந்தது. முதலீட்டாளர்கள் தங்களது பணத்தைக் கொட்டினர். நிறுவனத்தின் பங்கும் விலை கடும் உயர்வைக் கண்டது. இதையடுத்து, ராமலிங்க ராஜு தனது கவனத்தை கம்ப்யூட்டர்ஸ் துறையில் இருந்து மீண்டும் ரியல் எஸ்டேட் பக்கம் திருப்பினார்.
ஏற்கனவே, தனது குடும்பத்தாரின் வசம் இருந்த மைடாஸ் இன்ஃப்ரா மற்றும் மைடாஸ் பிராப்பர்டீஸ் போன்ற ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் அதி முதலீடு செய்து செய்யத் தொடங்கினார். முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கும் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பை அதிகரிப்பதற்கும், அவர் நிறுவனத்தின் நிதி பதிவுகளை கையாளத் தொடங்கினார். ரூ. 60 கோடியிலிருந்து ரூ. 600 கோடியாக லாபத்தை உயர்த்தி, தடுக்க முடியாத வளர்ச்சியின் மாயையை உருவாக்கினார்.
சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை உயர்ந்ததால், அவரும் அவரது சகோதரரும் அமைதியாக தங்கள் பங்குகளை விற்று, பணத்தைப் பயன்படுத்தி, ரியல் எஸ்டேட் துறையில் அதிக முதலீடுகளை செய்தனர். அதேநேரத்தில், தனது ஏமாற்றுதல் வித்தையை உயிப்புடன் வைத்திருக்க பெரிய நெட்ஒர்க்கை கட்டியெழுப்பினார். அவை தான் 365 போலி நிறுவனங்கள். இந்த நிறுவனங்கள் மூலம் 7,500 போலி விற்பனை இன்வாய்ஸ்களை தயாரித்துள்ளார். மேலும் இல்லாத பண இருப்புக்களை உருவாக்க வங்கி ஸ்டேட்மெண்ட்களை கூட போலியாக உருவாக்கினார்.
ஆனால், 2008 ஆம் ஆண்டில் அவரது நிறுவனத்தின் போலி முகத்திரை கிழியத் தொடங்கியது. சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தினர் உண்மையான வளர்ச்சியும், பணச்சுழற்சியும் இல்லாமல் கணக்குகளை போலியாக காட்டி வெற்றியின் தோற்றத்தை உருவாக்கி வைத்திருந்தனர். பின்னர், அந்த முகமூடி விலகியதும், இது தான் இந்திய வர்த்தக வரலாற்றில் மிகப் பெரிய நிதி மோசடிகளில் ஒன்றாக கருதப்பட்டது. இந்த மோசடி முதலில் சிறிய அளவில் தான் ஆரம்பித்தது. ஆனால், நிறுவனத்தின் மதிப்பு உயரத் தொடங்கியதும், அந்த பொய்யை அப்படியே தொடர வேண்டிய கட்டாயம் ராமலிங்க ராஜுவுக்கு ஏற்பட்டது.
மார்க்கெட்டின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய, ஒவ்வொரு காலாண்டிலும் பொய்யான லாபங்களை கணக்கில் காட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்காக பொய்யான வங்கி இருப்புகள் உருவாக்கப்பட்டன. ஆடிட்டர் அறிக்கைகள் போலியாக எழுதப்பட்டன. ஆனால், காலம் செல்ல செல்ல நிறுவனத்தின் உண்மையான வருவாய் மற்றும் காட்டப்பட்ட கணக்குகள் இடையே உள்ள வித்தியாசம் ஆயிரம் கோடிகளை தாண்டியது.
இதற்கு முக்கிய காரணம் ராமலிங்க ராஜு மற்றும் அவரது குடும்பத்தினர் ரியல் எஸ்டேட்டில் ஈடுபட்டிருந்தனர். ஹைதராபாத் ரியல் எஸ்டேட்டில் பெரிய அளவில் பணத்தை முதலீடு செய்தார். 2000 ஆம் ஆண்டுக்குப் பிறகு, ரியல் எஸ்டேட் துறை செழித்த நிலையில், ஆந்திராவில் ஒரு நிறுவனம் 58 ஏக்கருக்கு மேல் நிலத்தை வாங்கக்கூடாது என்ற விதி இருந்தது. இதைச் சமாளிக்க, அவர் தனது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் 300-க்கும் மேற்பட்ட நிறுவனங்களைத் திறந்து, ஹைதராபாத்தில் சுமார் 6,000 ஏக்கர் நிலத்தை வாங்கினார். 2000 ஆம் ஆண்டில் மெட்ரோ திட்டம் தொடங்கப்படுவதை அறிந்திருந்த அவர் அருகிலுள்ள நிறைய நிலங்களை வாங்கி சேர்த்துள்ளார்.
2008 ஆம் ஆண்டில் உலகளாவிய நிதி நெருக்கடி ஏற்பட்டபோது, நிலத்தின் விலைகள் கடுமையாக சரிந்தன. சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் விளம்பரதாரர் பங்குகள் வெறும் 2% ஆகக் குறைந்தன. புயலுக்கு முன் வரும் அமைதியாக தென்பட்டுள்ளது. சிக்கலை உணர்ந்த இராமலிங்க ராஜு, டிசம்பர் 2008 இல் அவநம்பிக்கையான முயற்சியை மேற்கொண்டார். சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனம் மைட்டாஸ் இன்ஃப்ரா மற்றும் மைட்டாஸ் பிராப்பர்டீஸ் ஆகிய தனது குடும்பத்தினர் வசம் இருந்த ரியல் எஸ்டேட் நிறுவனங்களை கையகப்படுத்துவதாக அறிவித்தார்.
ஆனால், அவரது இந்த முயற்சி பெரும் தோல்வியைச் சந்தித்தது. அவரின் நடவடிக்கையைப் பார்த்து உஷாரான சில முதலீட்டாளர்கள் உடனடியாக தங்களது பங்குகளை விற்கத் தொடங்கியுள்ளனர். இதனால், சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் பங்குகள் மளமளவென சரிந்துள்ளது. இதற்கிடையில், ஊழியர்களின் சம்பளத்தையும் அவர் கையாண்டுள்ளார். சத்யம் நிறுவனத்தில் 40,000 ஊழியர்கள் தான் இருந்தனர். ஆனால் ஆவணங்கள் சுமார் 53,000 பேர் இருப்பதாக காட்டின.
இந்த வழியில், ராமலிங்க ராஜு ஒவ்வொரு மாதமும் 13,000 போலி ஊழியர்களின் சம்பளத்தை கிட்டத்தட்ட ரூ. 20 கோடிக்கு எடுத்துக்கொண்டுள்ளார். 2008 ஆம் ஆண்டுக்குள், சத்யத்தில் போலி கணக்குகள் மூலம் சுமார் ரூ. 7,000 கோடி மோசடி செய்யப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. ராமலிங்க ராஜு மதிப்பு இல்லாமல் போராடும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ளவும், ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் மதிப்பை ரூ. 7,000 கோடியாக உயர்த்தவும், அந்தத் தொகையை மீண்டும் இருப்புநிலைக் குறிப்பில் சேர்க்கவும் திட்டமிட்டு இருந்துள்ளார். இந்தத் திட்டம் செயல்பட்டிருந்தால், ரூ. 7,000 கோடி தவறாகப் பயன்படுத்தப்பட்டதை யாரும் உணர்ந்திருக்க மாட்டார்கள்.
ஆனால், அவரது சூதாட்டம் வெளியுலகிற்கு வெட்ட வெளிச்சமாக தெரிந்தது. இதனால், டிசம்பர் 23, 2008 அன்று, மோசமான நிறுவன நிர்வாகத் தரநிலைகள் காரணமாக, உலக வங்கி சத்யம் நிறுவனத்தின் மீது எட்டு ஆண்டு தடையை விதித்தது. இதையடுத்து அந்த நிறுவனத்தின் தலைவர் ராஜு ஜனவரி 7, 2009 அன்று ராஜினாமா செய்தார். அத்துடன் தனது கடிதத்தின் மூலம் கார்ப்பரேட் உலகினர் பெரும் இடியை இறக்கினார்.
இந்திய பங்குச் சந்தை ஒழுங்குமுறை வாரியத்துக்கு (செபி) அவர் எழுதிய கடிதத்தில், "சத்யம் கம்ப்யூட்டர் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவிற்கு, கணக்குகளில் மிகப்பெரிய அளவில் மோசடி நடந்ததை நான் ஒப்புக்கொள்கிறேன். உண்மையான மற்றும் அறிவிக்கப்பட்ட இயக்க லாபத்திற்கு இடையேயான சிறிய இடைவெளி நிர்வகிக்க முடியாத அளவுக்கு வளர்ந்தது. இப்போது நான் விளைவுகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன்." என்று கூறியிருந்தார்.
இதைத்தொடர்ந்து, ஒரே நாளில் சத்யம் நிறுவனத்தின் பங்குகள் விலை 80% வரை சரிந்தது. ரூ. 14,162 கோடி வரை முதலீட்டாளர் இழந்தனர். இதையடுத்து, துரிதமாக செயல்பட்ட இந்திய அரசு, உடனடியாக நிறுவனத்தின் நிர்வாக வாரியத்தை கலைத்து உத்தரவிட்டது. ராமலிங்க ராஜுவையும், அவரது நெருங்கிய நண்பர்களையும் சி.பி.ஐ கைது செய்தது. அதே நேரத்தில் நிறுவனத்தின் தணிக்கையாளரான பிரைஸ்வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ் மோசடியைக் கண்டறியத் தவறியதற்காக விசாரணையை எதிர்கொண்டது.
தொடர்ந்து, ஏப்ரல் 2009 இல் அரசின் ஒழுங்குமுறையுடன், சத்யம் பங்குகளை விற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதில், டெக் மஹிந்திரா 51% பங்குகளை வாங்கி, அதை மஹிந்திரா சத்யம் என்று மறுபெயரிட்டது. 2013 இல், அந்த நிறுவனம் டெக் மஹிந்திராவுடன் முழுமையாக இணைக்கப்பட்டது. பங்குச் சந்தைகளில் முதலீடு செய்ய ராமலிங்க ராஜுவுக்கு 14 ஆண்டுகள் தடை செய்யப்பட்ட அதே வேளையில் 2015 ஆம் ஆண்டில் ராமலிங்க ராஜு மீதான மோசடி வழக்கு நடைபெற்றது. இதில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார். இதையடுத்து, ராமலிங்க ராஜு மற்றும் அவரது சகோதரர்களுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் இருந்து அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டாலும், இன்னும் வழக்கு நடந்து வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.