மறைந்த ரத்தன் டாட்டா மேலாளரும், அவருக்கு நெருக்கமானவராகவும் அறியப்பட்ட சாந்தனு நாயுடு, தற்போது டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் மற்றும் வியூக வகுப்பாளராக பணியமர்த்தப்பட்டுள்ளார். இது குறித்து சாந்தனு நாயுடு, தனது LinkedIn தளத்தில் நெகிழ்ச்சிகரமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
"என் தந்தை, டாட்டா மோட்டார்ஸ் ஆலைக்கு வீட்டில் இருந்து நடந்து சென்றது எனக்கு நினைவு இருக்கிறது. அப்போது, என் தந்தை வெள்ளை நிற சட்டையும், நேவி பேண்டும் அணிந்திருப்பார். என் தந்தைக்காக ஜன்னல் அருகே நான் காத்திருப்பேன். வாழ்க்கை என்னும் வட்டம் தற்போது முழுமையடைந்தது" என சாந்தனு நாயுடு பதிவிட்டுள்ளார். குறிப்பாக, டாட்டா நானோ கார் அருகே அவர் நிற்கும் புகைப்படைத்துடன் இந்தக் குறிப்பை சாந்தனு நாயுடு வெளியிட்டுள்ளார்.
தொழில் ரீதியான உறவை விட தனிப்பட்ட முறையில், ரத்தன் டாட்டாவுடன் சாந்தனு நாயுடுக்கு அதிக நெருக்கம் இருந்தது. ரத்தன் டாட்டாவின் உயிலில் சாந்தனு நாயுடுவின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. குறிப்பாக, சாந்தனு நாயுடுவின் கல்விக் கடன்களை ரத்தன் டாட்டா தள்ளுபடி செய்ததாக டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், மூத்த குடிமக்களுக்குத் துணையாக இருக்கும் நாயுடுவின் ஸ்டார்ட்அப் நிறுவனமான குட்ஃபெல்லோஸில், டாட்டா தனது பங்குகளை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
அக்டோபர் 9, 2024 அன்று ரத்தன் டாட்டா மறைந்த போது, உணர்ச்சிப்பூர்வமான பதிவு ஒன்றை சாந்தனு நாயுடு வெளியிட்டார். "இந்த நட்பு விட்டுச் சென்ற வெற்றிடத்தை நிரப்ப என் காலம் வரை நான் முயற்சி செய்வேன். இந்த துக்கம் தான் அன்புக்கு செலுத்தக் கூடிய விலை. சென்று வாருங்கள் என் அருமை கலங்கரைவிளக்கமே" என சாந்தனு நாயுடு தெரிவித்திருந்தார்.
சாவித்ரிபாய் பூலே புனே பல்கலைக்கழகத்தில் பொறியியலாளர் மற்றும் கார்னெல் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ பட்டதாரியான நாயுடு, முதன்முதலில் 2018 இல் டாடாவின் உதவியாளராக பணிக்கு சேர்ந்தார்.