உலகப் பணக்காரர்கள் என்றால், எலான் மஸ்க் என்பார்கள், அதானி என்பார்கள், அம்பானி என்பார்கள், ஆனால், 90ஸ் கிட்ஸ் அதற்கு முந்தைய தலைமுறையினருக்கு பணக்காரர் என்றாலே அவர்களுக்கு டாடா பிர்லாதான். இப்போதும்கூட கிராமங்களில், பணக்காரர்கள் என்றால் டாடா பிர்லாதான். பணம் உள்ள யாராவது ஆடம்பரமாக இருந்தால் அவர்களைப் பார்த்து, டாடா பிர்லா என்று சொல்வது உண்டு. நீ என்ன பெரிய டாடா பிர்லாவா என்று கேட்பதும்கூட உண்டு.
ஆனால், இந்தியாவின் பணக்காரர்களில் ஒருவரான ரத்தன் டாடாவின் சகோதரருக்கு 24 ஆயிரம் கோடிகள் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இருந்தாலும், மும்பையில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் 2 படுக்கை அறை கொண்ட ஒரு வீட்டில் தனக்கென ஒரு செல்போன்கூட இல்லாமல் மிகவும் எளிமையாக வாழ்வது பலரையும் ஆச்சரியம் அடைய வைத்துள்ளது.
பணம் இருந்தால் பலரும் ஆடம்பரமாக வாழ நினைப்பார்கள். பணம் இல்லாவிட்டாலும் கடன் வாங்கியாவது ஆடம்பரமாக வாழ்பவர்களும் இருக்கிறார்கள். அதே நேரத்தில் பணம் இருந்தாலும் கஞ்சத் தனமாக 10 பைசா செலவு செய்யாமல் வாழ்வார்கள். ஆனால், தனக்கு கோடி கோடியாக சொத்து இருந்தாலும், எளிமையாக வாழ்வது என்பது ஒரு வாழ்வியல் கோட்பாடு இருந்தால்தான் முடியும்.
அதிலும், பரம்பரை பணக்காரராக இருக்கும் டாடா குடும்பத்தில் ரத்தன் டாடாவின் சகோதரர் ஜிம்மி நேவல் டாடா தனக்கு 24 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து இருந்தாலும், ஆடம்பரம் இல்லாமல், ஆரவாரம் இல்லாமல் மும்பையின் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு 2BHK வீட்டில் மிகவும் எளிமையாக வசிக்கிறார்.
டாடா பிர்லா என்றால் ஏதோ நேற்று இன்று உருவான புது பணக்காரர்கள் இல்லை. ஏதோ, 30 - 40 ஆண்டுகளில் உருவான பணக்காரர்களும் இல்லை. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலேயே டாடாவும் பிர்லாவும் இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் இருந்தவர்கள்.
டாடா ஏதோ வெறுமனே பணக்காரர் மட்டுமல்ல, அன்றைக்கு மகாத்மாக காந்தியை ஆதரித்தவர். டாடா குழுமம் தனது டாடா அறக்கட்டளை மூலம் பல நூறு கோடிகளை உதவியாக வழங்கியுள்ளது.
2024-ம் ஆண்டு நிலவரப்படி, ரத்தன் டாடாவின் நிகர சொத்து மதிப்பு சுமார் ரூ.3800 கோடி. அதாவது இவரது செல்வத்தின் பெரும்பகுதியை நன்கொடையாக அளித்த பிறகு உள்ள சொத்துகளின் மதிப்பு இது. இந்தியாவின் பெரும் பணக்காரர் என்றால் அது ரத்தன் டாடாதான். ஆனால், டாடா சன்ஸ் நிறுவனத்தின் தனித்துவமான உரிமைக் கொள்கை காரணமாக, ஃபோர்ப்ஸ் பத்திரிகையை பில்லியனர்கள் பட்டியலில் ரத்தன் டாடா இடம்பெறவில்லை.
டாடா நிறுவனத்தின் லாபத்தில் 65 முதல் 70% அறக்கட்டளைகள் மூலம் செலவு செய்யப்படுகிறது. இன்றைக்கும் பல கோடிகளை டாடா அறக்கட்டளை தானமாக வழங்கி வருகிறது.
இந்த சூழ்நிலையில்தான், ரத்தன் டாடா தனது சகோதரர் பற்றிய ஒரு பழைய புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ரத்தன் டாடா தனது சகோதரர் ஜிம்மி நேவல் டாடா உடன் இருக்கிறார். இந்த படத்தில் ரத்தன் டாடா உடன் இருக்கும் அவரது தம்பி ஜிம்மி நேவல் டாடா மும்பையில் கொலாபாவில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில், 2 படுக்கை அறை 1 ஹால், 1 கிச்சன் உள்ள ஒரு சாதாரண வீட்டில் மிகவும் எளிமையாக வாழ்ந்து வருகிறார்.
இவ்வளவு பெரிய பணக்காரருக்கு ஒரு செல்போன்கூட இல்லை. அவர் செல்போன் பயன்படுத்துவது இல்லை. இப்போதும், செய்திகளை நாளிதழ்களில் படித்துத்தான் தெரிந்துகொள்கிறார். அதே நேரத்தில், இவர் ரத்தன் டாடாவின் சகோதரர் என்பது பலருக்கும் தெரியாது.
இப்படி எளிமையாக இருக்கும் ஜிம்மி நேவல் டாடாவை பலரும் இவர் ஏழையோ என்று கூட நினைக்கலாம். ஆனால், டாடா தனது மகன்களுக்கு உரியச் சொத்துகளைப் பிரித்துக் கொடுத்துள்ளார். அதுவே, பல ஆயிரம் கோடிகள் வரும் என்கிறார்கள். பார்ச்சூன் இந்தியா வெளியிட்டுள்ள தகவலின்படி, ஜிம்மி நேவல் டாடாவின் சொத்து மதிப்பு ரூ. 23,874 கோடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது 2.99பில்லியன் டாலர். இவர் டாடா சன்ஸ் நிறுவனத்தின் 0.81% பங்குகளை வைத்துள்ளார். டி.சி.எஸ், டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், டாடா கெமிக்கல்ஸ், இந்தியன் ஹோட்டல்ஸ், டாடா பவர் உள்ளிட்ட டாடா நிறுவனங்களில் பங்குதாரராகவும் உள்ளார்.
ஜிம்மி டாடா, சர் ரத்தன் டாடா அறக்கட்டளையின் அறங்காவலராக இருக்கிறார். இது அவரது தந்தை நேவல் டாடா 1989-ல் இறந்த பிறகு அவர் மரபுரிமையாக கிடைத்தது. இந்த அறக்கட்டளையில் பல கோடி சொத்துகள் உள்ளன.
இவ்வளவு பெரிய பணக்காரர், கோடி கோடியாக சொத்து இருந்தாலும், மும்பையில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு சாதாரண 2BHK வீட்டில் வசிக்கிறார் என்பது பலரையும் வியக்க வைத்துள்ளது.
இப்படி எளிமையாக வாழும் ஜிம்மி டாடா புத்தகங்கள், செய்தித்தாள்களைப் படிக்கவே அதிகம் விரும்புவார் என்கிறார்கள். அதுமட்டுமல்ல, அவர் ஒரு திறமையான ஸ்குவாஷ் விளையாட்டு வீரர். ஹர்ஷ் கோயங்காவின் பழைய பதிவு ஒன்றின்படி, ஜிம்மி முன்னாள் குவாஷ் வீரராக இருந்துள்ளார். சில பணக்காரர்கள் ஆடம்பரமாக வாழ்ந்துகொண்டிருக்கும்போது, பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே பணக்காரக் குடும்பமாக இருந்த ரத்தன் டாடாவின் சகோதரர் ஜிம்மி டாடா இவ்வளவு எளிமையாக வாழ்ந்தால் யாரால்தான் வியக்காமல் இருக்க முடியும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“