RBI advised employees to work from home : இந்திய ரிசர்வ் வங்கியில் மட்டும் மொத்தம் 14 ஆயிரம் நபர்கள் பணியாற்றுகின்றார்கள். உலகம் முழுவதும் தீவிரமாய் பரவி வரும் கொரோனா நோய் தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க தொடர்ந்து தனியார் நிறுவனங்கள் “வொர்க் ஃப்ரம் ஹோமினை” ஊழியர்களுக்கு வழங்க, மத்திய அரசு ஊக்கப்படுத்தி வந்தது. ஏற்கனவே பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் ஆகியவை முழுமையாக மூடப்பட்ட நிலையில் பல்வேறு தனியார் நிறுவனங்களும் வொர்க் ஃப்ரம் ஹோமினை தங்களின் ஊழியர்களுக்கு தந்துள்ளனர்.
இந்நிலையில் கரண்சி கவுண்ட்டர்ஸ், ஆர்.டி.ஜி.எஸ் துறை, மற்றும் அரசாங்க பரிவர்த்தனைகள் பிரிவுகளில் வேலை பார்ப்பவர்கள் தவிர்த்து இதர நபர்களுக்கு வொர்க் ஃப்ரம் ஹோம் வசதியினை சில நிபந்தனைகளுடன் வழங்கியுள்ளது ஆர்.பி.ஐ. அவசர காலங்களில் அலுவலகத்திற்கு தயாராக இருக்க வேண்டும், அவர்கள் எங்கே தங்க வேண்டும் போன்ற விதிமுறைகள் அவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ், நான்கு துணை ஆளுநர்கள், நிர்வாக இயக்குநர்கள் மற்றும் பல முக்கிய அதிகாரிகள் தலைமையகத்தில் பணியாற்றுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அகில இந்திய ரிசர்வ் வங்கிப் பணியாளர்கள் சங்கம் தங்களின் முழு ஒத்துழைப்பை வழங்கியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil