KYC-யில் புதிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அண்மையில் ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் சீரான சேவை வழங்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பதிவில் KYC மற்றும் அதன் மாற்றங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
KYC என்றால் என்ன?
ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, KYC என்பது வங்கிக் கணக்கைத் திறக்க அல்லது பராமரிக்க அடையாளம் மற்றும் முகவரிக்கான ஆதாரத்தை வழங்குவதை உள்ளடக்கிய ஒரு செயல்முறையாகும். பணமோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்வதைத் தடுக்க KYC வழிகாட்டுதல்கள் உள்ளன. வங்கிக் கணக்கைத் திறக்க, அடையாளச் சான்றாகவும் முகவரிச் சான்றாகவும், சமீபத்திய புகைப்படத்துடன் தலா ஒரு ஆவணத்தை வழங்க வேண்டும். ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணங்களில் ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் போன்றவற்றை மட்டுமே அடையாளச் சான்றாக பயன்படுத்த முடியும்.
டிஜிட்டல் KYC என்றால் என்ன?
ஆன்லைன் மூலம் நேரடியாக புகைப்படங்கள் மற்றும் ஆதார் அட்டை போன்ற ஆவணங்களை சமர்ப்பிப்பது டிஜிட்டல் KYC எனக் கருதப்படுகிறது. இந்த முறையில் புகைப்படம் எடுக்கப்பட்ட இடம் உள்ளிட்ட தகவல்கள் வழங்குவதன் மூலம் மேலும் பாதுகாப்பான முறையை கையாள முடியும்.
KYC விதிகளில் முக்கிய மாற்றங்கள்:
நிதி நிறுவனங்களில் ஏற்கனவே உள்ள KYC-இணக்க வாடிக்கையாளர் ஒரு புதிய கணக்கைத் திறந்தாலோ அல்லது அதே நிறுவனத்தில் பிற சேவைகளைப் பெற்றாலோ, CDD செயல்முறையை மீண்டும் செய்ய வேண்டியதில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கு விரைவான சேவையை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆபத்தான கணக்குகள் கண்டறியப்பட்டால், அவற்றில் சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகளை கண்காணிக்க பலமுறை சோதனைக்குட்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
KYC தகவல்களை சீரான இடைவெளியில் வாடிக்கையாளர்கள் புதுப்பிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இருந்தால் அவற்றை, கட்டாயம் புதுப்பித்துக் கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி நிறுவனங்கள் தங்களிடமுள்ள வாடிக்கையாளர்களின் KYC தகவல்களை மத்திய பதிவேட்டில் பதிவேற்ற வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றை 7 நாள்களுக்குள் பதிவேற்ற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் வாடிக்கையாளர்களின் தகவல்களை எளிதாக பெற முடியும் எனவும், ஒரே சான்றுகளை மீண்டும் சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் வாடிக்கையாளர்களுக்கு தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
KYC ஆவணங்களில் “section” எனக் குறிப்பிடப்பட்டிருந்தவை, “paragraph,” என மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இவை ஆவணத்தில் நிலைத்தன்மையை உறுதி செய்யும் எனக் கூறப்படுகிறது.
இந்த மாற்றங்கள் அனைத்தும் நிதி நிறுவனங்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு KYC செயல்முறையை எளிதாக்க உதவும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம், புதிய கணக்கு தொடங்குதல் மற்றும் மாற்றங்களில் விரைவான சேவையை வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.