சந்திரன்.
ஆக்ஸிஸ் வங்கி, கருர் வைஸ்யா வங்கி மற்றும் சவுத் இந்தியன் வங்கி என, இந்தியாவின் 3 தனியார் துறை வங்கிகள் தங்க, வெள்ளி இறக்குமதியில் ஈடுபட அனுமதிக்கப்படவில்லை. வரும் 2018-19ம் நிதியாண்டில் தங்கம் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்ட வங்கிகளின் பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி நேற்று, அதாவது ஏப்ரல் 2ம் தேதி வெளியிட்டுள்ளது. இதில் இந்த 3 வங்கிகளின் பெயரும் இடம்பெறாததால் இந்த அனுமதி மறுப்பு விஷயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஆக்ஸிஸ் வங்கியைப் பொறுத்தவரை, ஏற்கனவே இந்திய ரிசர்வ் வங்கியின் சாந்தப் பார்வையில் இருந்து அது விலக்கி வைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்புதான், 4ம் முறையாக ஷிகா ஷர்மாவை அதன் தலைமை செயல் அதிகாரியாக நியமியத்ததை மறுபரிசீலனை செய்யும்படி இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியிருந்தது.
அதோடு, அவரது பணிக் காலத்தில் பல நேரங்களில் ரிசர்வ் வங்கியின் விதிகளும், அறிவுறுத்தல்களும் மீறப்பட்டுள்ளது என்பது சுட்டிக் காட்டப்பட்டது. அதில் ஒன்று அயல்நாட்டு வர்த்தகம் தொடர்பான விதிமீறல் என்பது கவனிக்கத்தக்கது. இந்நிலையில் ஆக்ஸிஸ் வங்கி மீதான நடவடிக்கையை எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது. இதே வகையான விதிமீறல்கள் கருர் வைஸ்யா வங்கியிலும், சவுத் இந்தியன் வங்கியிலும் நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை ரிசர்வ் வங்கியின் தற்போதைய நடவடிக்கை சுட்டிக் காட்டுவதாகவும் இருக்கலாம்.
பாங்க் ஆப் பரோடா, ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் பேங்க் ஆஃப் நோவா ஸ்காட்டியா உள்ளிட்ட வேறு 16 வங்கிகள் நடப்பு நிதியாண்டில் தங்கம் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்ட நிறுவனங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. ஒவ்வோர் ஆண்டும், இத்தகைய பட்டியல் ஒன்றை, இந்திய ரிசர்வ் வங்கி, நிதியாண்டு தொடக்கத்திலேயே வெளியிடுவது கவனிக்கத்தக்கது.