தங்கம் மற்றும் வெள்ளி கடன் விதிமுறைகளில் புதிய மாற்றங்களை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த மாற்றங்கள் அனைத்தும் ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதிய விதிமுறைகளை இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.
சிறிய கடன்களுக்கான அதிக எல்.டி.வி (Loan-to-Value) விகிதம்: முன்னதாக தங்கத்தின் மதிப்பில் இருந்து அதிகபட்சமாக 75 சதவீதம் வரை கடன் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இனி, 85 சதவீதம் வரை கடன் பெற்றுக் கொள்ள முடியும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரூ. 2.5 லட்சத்திற்கும் குறைவான கடன்களுக்குக் கடன் மதிப்பீடு இல்லை: ரூ. 2.5 லட்சத்திற்கு குறைவான அளவில் வாங்கப்படும் தங்க நகைக் கடன்களுக்கு விரிவான மதிப்பீடு அல்லது கடன் சோதனைகள் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறைந்த வருமானம் மற்றும் கிராமப்புற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எளிதாக கடன் பெற வழிவகை செய்யும் என்று கருதப்படுகிறது.
புல்லட் திருப்பி செலுத்தும் கடன்களுக்கான காலவரம்பு: வட்டி மற்றும் அசல் தொகையை இறுதியில் மொத்தமாகச் செலுத்தும் கடன்களை, இனி 12 மாதங்களில் திருப்பி செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அடமானம் வைப்பதற்கான வரம்பு: ஒரு கிலோ வரை தங்க ஆபரணங்களையும், 50 கிராம் வரை தங்க நாணயங்களையும், 10 கிலோ வரை வெள்ளி ஆபரணங்களையும், 500 கிராம் வரை வெள்ளி நாணயங்களையும் அடமானம் வைத்து கடன் பெற்றுக் கொள்ளலாம் என்று வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நகைகளை திரும்பப் பெறும் காலவரம்பு: கடன் தொகை முழுவதுமாக செலுத்திய பின்னர், தங்கம் அல்லது வெள்ளி நகையை அன்றைய தினம் அல்லது அதிகபட்சமாக 7 நாட்களுக்குள் திருப்பி செலுத்த வேண்டும் என்று வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை தவறும்பட்சத்தில் நாள் ஒன்றுக்கு ரூ. 5000 இழப்பீடாக செலுத்த வேண்டிய சூழல் உருவாகும்.
சேதத்திற்கான இழப்பீடு: அடமானம் வைக்கப்பட்ட நகைகள் சேதம் அடைந்தால் அல்லது தொலைந்து போனால், அதற்கான முழுமையான இழப்பீடு தொகையை கடன் வழங்குநர் செலுத்த வேண்டும்.
வெளிப்படையான ஏல முறை: கடனை திருப்பி செலுத்த தவறும்பட்சத்தில் அடமானம் வைக்கப்பட்ட தங்கத்தை ஏலம் விடுவதற்கு முன், முறையான அறிவிப்பை வழங்க வேண்டும்.
விதிமுறைகள் அனைத்தும் தெளிவாக இருக்க வேண்டும்: கடன் விதிமுறைகள் மற்றும் மதிப்பீட்டு விவரங்கள் அனைத்தும், கடன் பெறும் நபருக்கு தெரிந்த மொழி அல்லது பிராந்திய மொழியில் இருக்க வேண்டும்.
இந்த புதிய விதிமுறைகள் அனைத்தும் ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக வழங்கப்பட்ட கடன்களுக்கு பழைய விதிமுறைகள் பின்பற்றப்படும்.