ஆர்.சந்திரன்
நாட்டின் முன்னணி தனியார்த் துறை வங்கிகளில் ஒன்றான ஆக்ஸிஸ் வங்கியின் தலைமை செயல் அதிகாரியாக மீண்டும் ஷிகா ஷர்மாவையே தேர்வு செய்தது ஏன் என இந்திய ரிசர்வ் வங்கி கேள்வி எழுப்பியுள்ளது. தற்போது பொறுப்பில் உள்ள அவரையே, மீண்டும் - வரும் 2018 ஜூன் முதல் பணியமர்த்த ஆக்ஸிஸ் வங்கி முயன்று வருகிறது.
கடந்த பல ஆண்டுகளாக இந்த பொறுப்பில் ஷிகா ஷர்மா உள்ளார். இந்நிலையில், இவ்வங்கியின் வாராக்கடன் குறித்து தரப்பட்டுள்ள தகவலில் பல தவறுகள் இருப்பதை ரிசர்வ் வங்கி கண்டுபிடித்தது. எனவே, இதுகுறித்து வங்கியிடம் ஏற்கனவே பலமுறை கேள்வி எழுப்பியுள்ளது. இது ஒருபுறமிருக்க, இதற்காக அண்மையில் ஆக்ஸிஸ் வங்கிக்கு 3 கோடி ரூபாய் அபராதம் விதித்தும் உத்தரவு பிறப்பித்துள்ளது. ரிசர்வ் வங்கி அடையாளம் கண்ட 4867 கோடி ரூபாய் வாராக்கடனுக்கு, ஏற்கனவே ஆக்ஸிஸ் வங்கியின் வரவு செலவு கணக்கில் தற்போது ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆனாலும், தற்போது புதிதாக ஒரு நிர்வாகம் பொறுப்பேற்றால் பரவாயில்லை என ரிசர்வ் வங்கி எதிர்பார்த்ததது. அதறகு மாறாக, மீண்டும் ஏன் ஷிகா ஷர்மாவையே நியமனம் செய்துள்ளார்கள் என்பதே இப்போது பரவலான கேள்வியாக விஸ்வரூபமெடுக்கிறது. ஆக்ஸிஸ் வங்கி மட்டுமின்றி, மற்றொரு முன்னணி தனியார் துறை வங்கியான ஐசிஐசிஐ வங்கியின் சிஇஓவான சந்தா கோச்சார் மீதும் குற்றச்சாட்டு உள்ள நிலையில், புதிய ஆட்கள் வரவுக்கு இடம் தராத வங்கிகளின் முயற்சி விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.