கரூர் வைஸ்யா வங்கி சொத்து வகைப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றாததால், ரூ 5 கோடி அபராதம் விதித்து இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
கரூர் வைஸ்யா வங்கிக்கு அபராதம்:
கரூர் வைஸ்யா வங்கி தமிழகத்தை தலைமை இடமாக கொண்டு இயங்கி வருகிறது. நாடு முழுவதும் இந்த வங்கியின் பல்வேறு கிளைகள் உள்ளன. இந்நிலையில் இந்த வங்கி சொத்து வகைப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றாததாலும், மோசடிகள் குறித்து சரியான தகவல்களைத் தராததால் 5 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதுக் குறித்து ரிசர்வ வங்கி நேற்று வெளியிட்ட அறிக்கையில், “கரூர் வைஸ்யா வங்கி நடப்புக் கணக்கு தொடங்கப்படும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளைப் பின்பற்ற தவறியுள்ளது.
அதே போல் சொத்து வகைப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றாததாலும், மோசடிகள் குறித்து சரியான தகவல்களைத் தராததாலும் கரூர் வைஸ்யா வங்கிக்கு 5 கோடி அபராதம் விதிக்கப்படுகிறது “ என்று தெரிவித்துள்ளது.
மேலும் இந்த வங்கி சில நடைமுறைகளுக்கு கட்டுப்படாததால்தான் அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதாகவும், வங்கியின் வாடிக்கையாளர்களின் பரிவர்த்தனைகளுக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்று ரிசர்வ் வங்கி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.