பங்குச் சந்தைகள் அழுத்தத்திற்கு உள்ளாகி இருக்கின்றன. நிஃப்டி 50, 1.1% அல்லது 250 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 23,172.70 ஆக இருந்தது. பி.எஸ்.இ சென்செக்ஸ் 840 புள்ளிகளுக்கு மேல் அல்லது 1% சரிந்து 76,535.24 ஆக குறைந்தது.
இன்றைய பங்குச் சந்தை வீழ்ச்சி அடைந்ததற்கான மூன்று காரணங்கள்
உலக சந்தைகளில் வர்த்தகம் குறைவு
கடந்த வெள்ளியன்று அமெரிக்க சந்தைகளில் ஏற்பட்ட சரிவைத் தொடர்ந்து, இன்றைய தினம் ஆசிய சந்தைகள் குறைந்த அளவில் வர்த்தகம் செய்தன. தென் கொரியாவின் கோஸ்பி 1.21% சரிந்து 2,485 இல் வர்த்தகமானது. ஆசியா டவ் 1.15% குறைந்து 3,676.11 ஆக வர்த்தகமானது. ஹாங்காங்கின் ஹாங் செங் 1.14% சரிந்து 18,847 இல் வர்த்தகமானது. இப்படி உலக அளவிலான வர்த்தகங்கள் சரிந்ததும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
கச்சா எண்ணெய் விலை உயர்வு
WTI கச்சா எண்ணெய் விலை 1.83% அதிகரித்து 77.97 அமெரிக்க டாலராகவும், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை 1.74% அதிகரித்து 81.15 டாலராகவும் இன்று காலை வர்த்தகம் செய்யப்பட்டது. "ரஷ்ய எண்ணெய் ஏற்றுமதி மீதான அமெரிக்கத் தடைகள் காரணமாக கச்சா எண்ணெய் விலை 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதால் இந்த நிலை உருவானது" என்று மேத்தா ஈக்விட்டிஸ் ஆராய்ச்சியின் மூத்த துணைத் தலைவர் பிரசாந்த் தாப்சே கூறினார். மேலும், வடக்கு அரைக்கோளத்தில் குளிர்ந்த காலநிலை மற்றும் சீனாவின் கொள்கை ஆதரவின் எதிர்பார்ப்புகளின் காரணமாக எரிசக்திக்கான அதிக தேவையினால் எண்ணெய் விலைகள் உயர்ந்துள்ளது என்று கேர்எட்ஜ் ரேட்டிங்கின் இணை பொருளாதார நிபுணர் மிஹிகா ஷர்மா கூறினார்.
வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் தொடர் விற்பனை
வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள், இந்திய பங்குச் சந்தைகளில் தொடர்ந்து விற்பனை செய்து வந்தனர். இதுவரை ஜனவரியில் ரூ. 21,357.46 கோடிக்கு விற்பனை செய்துள்ளனர். கடந்த மூன்று மாதங்களில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் விற்பனை ரூ. 1,77,402.49 கோடிக்கு நிகர மதிப்பில் உள்ளன. வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் தொடர்ச்சியான விற்பனையின் பின்னணியில் உள்ள முதன்மையான காரணம் டாலரின் நிலையான அதிகரிப்பு ஆகும்.
அதனடிப்படையில், ஆசிய மற்றும் அமெரிக்க சந்தைகளின் வீழ்ச்சி, கச்சா எண்ணெய் விலை உயர்வு, வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் தொடர் விற்பனை ஆகியவை இந்திய சந்தையை பெருமளவு பாதித்தன.