ரிலையன்ஸின் ஜியோ நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி, கிரிப்டோகரன்சி என்ற பெயரில் மர்ம கும்பல் மோசடியில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெலிகாம் சந்தியில், மிகப்பெரிய இடத்தை பெற்றிருக்கும், ரிலையன்ஸின் ஜியோ நிறுவனம், பல்வேறு வர்த்தக பணிகளில் ஈடுபட்டு வருகிறது. தற்போது, கிரிப்டோகரன்சி மீது முதலீட்டாளர்கள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருவதால், ஜியோ நிறுவனம், விரைவில் கிரிப்டோகரன்சியை அறிமுகம் செய்ய உள்ளதாக சமீபத்தில் இணையத்தில் தகவல் கசிந்தது.
இருப்பினும், இதுக்குறித்து எந்தவித அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த செய்தியைப் பயன்படுத்திக் கொண்ட இணைய மோசடி கும்பல் ஒன்று, கிரிப்டோகரன்சி மோசடியில் ஈடுபட்டது.reliance-jiocoin.com என்ற பெயரில் ஒரு இணையதளத்தை துவக்கி, அதன் வழியே கிரிப்டோகரன்சி மோசடியில் ஈடுபட்டுள்ளது. இதில் 1 ஜியோ நாணயத்தின் ஆரம்ப விலை 100 ரூபாய் என்று அறிவித்து, தகவல்களை சேகரிக்கும் வேலையில் ஆரம்பித்துள்ளது.
இதுக் குறித்த தகவல் வெளியில் கசிந்த உடன், இணைய தளம் செயல்படாமல் நின்றுள்ளது. இணையவழி மோசடி குறித்து ரிசர்வ் வங்கி தரப்பில் பலமுறை எச்சரிக்கை விடப்பட்டிருந்தும், இதுப்போன்ற மோசடிகள் நிகழ்வது தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், கிரிப்டோகரன்சி குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
முகேஷ் அம்பானியின் மூத்த மகனாக ஆகாஷ் அம்பானி விரைவில், ரிலையன்ஸ் ஜியோ கிரிப்டோகரன்சியை அறிமுகப்படுத்தி முறையாக நடத்தவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இணைய வழியில் முதலீடு செய்யும் பொதுமக்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு பலமுறை விழிப்புணர்வு ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.