ஜியோ ஃபைபர் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 1100 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெலிகாம் நிறுவனத்தை தொடர்ந்து, பிராட்பேன்ட் சேவையை வழங்கவும் ஜியோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கடந்தாண்டு சோதனைகள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், சில குறிப்பிட்ட பகுதியில் சேவையும் துவங்கப்பட்டன.
இந்நிலையில், மேலும் தொடரும் இந்த சோதனைத் திட்டத்தின் போது, பிரீவியூ திட்டங்களின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு 1100 ஜிபி டேட்டா வரையிலும் இலவசமாக வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான சோதனை சென்னை உட்பட, மும்பை மற்றும் புதுடெல்லி போன்ற முக்கிய நகரங்களிலும் விரைவில் தொடங்கப்படவுள்ளது.
ஜியோ ஃபைபர் திட்டத்தில் முதற்கட்டமாக 100Mbps வேகத்தில் 100 ஜிபி இலவச டேட்டா வழங்கப்படுகிறது. இலவச டேட்டா நிறைவுற்றதும், வாடிக்கையாளர்கள் டாப்-அப் முறையில் ஒரே மாதத்தில் 25 முறை 40 ஜிபி டேட்டா பெற முடியும். அந்த வகையில் வாடிக்கையாளர்கள் 1100 ஜிபி (1.1TB) இலவச டேட்டா பெற முடியும்.
இதுவரை இந்தியா முழுக்க சுமார் மூன்று லட்சம் கிலோமீட்டர் பரப்பளவில் ஆப்டிக் ஃபைபர் நெட்வொர்க்-களை ரிலையன்ஸ் ஜியோ நிறுவியிருப்பதால், ஃபைபர் சேவைகள் அதிவேகமாக வழங்கப்படும் என்ற கூடுதல் தகவலும் வெளியாகியுள்ளது.