ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், பிரைம் வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக 1 ஆண்டுகள் இலவச சேவை வழங்குவதாக அறிவித்துள்ளது.
டெலிகாம் சந்தையில் கடந்த 2016 ஆம் ஆண்டும் நுழைந்த ஜியோ நிறுவனம், முதல் 3 மாதங்களுக்கு இலவச சேவையை வழங்கி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. அதன் பின்பு, 2017 ஆம் ஆண்டில் ’ஹேப்பி நியூ இயர் ஆஃபர்’ என கூடுதலாக 3 மாதங்கள் முற்றிலும் இலவச சேவை வழங்குவதாக அறிவித்து புதிய புரட்சியை செய்தது.
கடந்த ஏப்ரல் 2017 ஆம் ஆண்டு ஜியோவின் கட்டண சேவை ஆரம்பித்தது.அதில் ஜியோ வாடிக்கையாளர்கள் பிரைம் வாடிக்கையாளராக ரூ. 99 கட்டி இணைந்தனர். பிரைம் உறுப்பினர் என்ற திட்டத்தில் இணைந்த வாடிக்கையாளர்களுக்கு சம்மர் சர்ப்ரைஸ் என்ற பெயரில் மேலும் மூன்று மாதங்கள் இலவச சேவை வழங்கப்பட்டது.
இதன்படி பிரைம் வாடிக்கையாளர்களுக்கு டேட்டா, ரோமிங் வசதி, இலவச எஸ்எம்எஸ் சேவை ஆகியவை வழங்கப்பட்டன. வாடிக்கையாளர்களை கவரும் வகையில், புதிய ரீசார்ஜ் திட்டங்கள், கேஸ்பேக் ஆஃபர்கள், கிஃப்ட் வவுச்சர்கள் ஆகியவையும் அறிவிக்கப்பட்டன.
இதன் காரணமாக, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை ஜியோ நிறுவனத்தில் 17 கோடி வாடிக்கையாளர்கள் இணைந்தணர். இந்நிலையில், நேற்று(30.3.18) பெரும்பாலான ஜியோ பிரைம் வாடிக்கையாளர்களின் ரூ.99 வருடாந்திர உறுப்பினர் கட்டணம் நிறைவடைந்தது.
இந்நிலையில், விரைவில் ஜியோ நிறுவனத்தின் அடுத்த ரீசார்ஜ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, இன்று (31.3.18) காலை ஜியோ நிறுவனம், பிரைம் வாடிக்கையாளர்களுக்கு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், ரூ.99 செலுத்தி பிரைம் திட்டத்தில் இணைந்த வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக ஒரு ஆண்டு சேவை வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், இந்த சலுகை வரும் 31-ம்தேதிக்குள் ரூ.99 செலுத்தி பிரைம் திட்டத்தில் சேர்பவர்களுக்கும் மட்டுமே பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ரூ.99 செலுத்திய உறுப்பினர்கள் மார்ச்31-ம்தேதிக்கு பின் மீண்டும் ரூ.99 செலுத்தத் தேவையில்லை. அதேசமயம், ஏப்ரல் 1-ம் தேதிக்கு பின் ஜியோ பிரைமில் இணையும் வாடிக்கையாளர்கள் மட்டும் ரூ.99 உறுப்பினர் கட்டணமாக செலுத்த வேண்டும்.
பிரைம் வாடிக்கையாளர்களுக்கு அடுத்து வரும் 12 மாதங்களுக்கு இந்த இலவச சேவை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.