கடன்களுக்கான வட்டி விகிதம், வெளிப்புற விகிதத்துடன் இணைக்கப்பட உள்ளது. இதனால் கடன்தாரர்கள் செலுத்தும் மாதத்தவணையிலும், இது, தாக்கம் செலுத்தும் எனக்கூறப்படுகின்றது.
இந்தியாவின் முதன்மை வங்கியான ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், "அக்டோபர் மாதம் முதல், வீட்டுக்கடன், வாகன கடன், தனிநபர் கடன் உள்ளிட்ட அனைத்து வகை வங்கி கடன்களும், வெளிப்புற விகிதங்களுடன் இணைக்கப்பட வேண்டும் என்றும், மேலும் ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதம், மூன்று மாத அல்லது ஆறு மாத கால அரசு பத்திரத்தின் பலன் மற்றும் ‘பைனான்சியல் பெஞ்ச்மார்க்ஸ்’ இந்தியா அரசு வெளியிடும் ஏதேனும் ஒரு சந்தை வட்டி விகிதத்துடன் இணைக்கப்பட்டு கணக்கிடப்பட வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.
கடன் விகித முறை
இந்தியாவில் உள்ள வங்கிகளால் பேஸ்ரேட் விகிதத்தில் வழங்கப்பட்டு வந்த கடன், தற்போது எம்.சி.எல்.ஆர்., விகிதத்தில் வழங்கப்பட்டு வருகின்றன. கடன் விகித மாற்றத்தின் பலன் வாடிக்கையாளர்களுக்கு சென்றடைவ தில்லை என கருதப்பட்டதால், ரிசர்வ் வங்கி இந்த மாற்றங்களை கொண்டு வந்தது.
சமீபத்தில் பல்வேறு வங்கிகள், ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதத்துடன் இணைக்கப்பட்ட கடன் விகிதத்தை அறிவித்து வருகின்றன. இந்நிலையில், அக்டோபர் மாதம் முதல், அனைத்து வகை கடன்களும், ரெப்போ விகிதம் உள்ளிட்ட வெளிப்புற வட்டி விகிதத்துடன் இணைக்கப்பட வேண்டும் என, ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
அதன் படி அனைத்து பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள், கடன்களை வெளிப்புற வட்டி விகிதத்துடன் இணைக்க வேண்டும். இது, எல்லா புதிய கடன்களுக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக எம்.சி.எல்.ஆர்., உள்ளிட்ட முறைகளில் பெறப்பட்ட கடன்களை பொருத்தவரை, அவை முடியும் காலம் வரை அதே முறையே இருக்கும். ஆனால் வாடிக்கையாளர்கள் விரும்பினால், புதிய கடன் விகித முறைக்கு மாறிக்கொள்ளலாம். புதிய கடனுக்கான வட்டி விகிதம் வசூலிக்கப்படும்.
மேலும் வங்கிகள் குறிப்பிட்ட கடன் வகையில் சீரான வட்டி விகிதத்தை கடைப்பிடிக்க வேண்டும். ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு படி, கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் கடன்களுக்கான மாதத்தவணையை பொருத்தவரை, வட்டி விகிதம் ரிசெட் செய்யப்படுவதற்கு ஏற்ப அது அமையும்.
ரிசர்வ் வங்கி, ஏனைய வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ள அறிவிப்பில், குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறையேனும் வட்டி விகிதத்தை வங்கிகள் மாற்றி அமைக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. வெளிப்புற வட்டி விகிதம் மாறினால், மூன்று மாத காலத்திற்குள் கடன் வட்டி விகிதத்தை மாற்றி அமைக்க வேண்டும்.
மாதத் தவணை மாற்றம்
வட்டி விகிதம் மாற்றி அமைக்கப்படுவதற்கான காலம், மூன்று மாதம் அல்லது அதற்கு குறைவாக இருக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
மேலும் மூன்று மாதங்களுக்குள் ஒரு முறைக்கு மேலும் மாற்றி அமைக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது. வட்டி விகிதம் மாற்றி அமைக்கப்படுவதற்கு ஏற்ப, கடனுக்கான மாத தவணை அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல, கடன் மீதான, ‘ஸ்பிரெட்’ எனப்படும் கூடுதல் வட்டி விகிதத்தை வங்கிகளே நிர்ணயிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
ரெப்போ விகிதத்துடன் இணைக்கப்பட்ட கடனில், முன்கூட்டியே செலுத்துவதற்கு அபராதம் இல்லை என்பதால், கடன்தாரர், வட்டி விகிதம் அதிகமாக இருப்பதாக நினைத்தால், கடனை முன்கூட்டியே செலுத்தி வெளியேறலாம்.